காலடியில் புதையுண்ட எமன் – கண்ணிவெடிகள்

This entry is part [part not set] of 1 in the series 20000717_Issue

வெங்கடரமணன்


இந்த நூற்றாண்டின் போர்த் தந்திரங்களுக்குள்ளே மிகவும் அபாயகரமானது கண்ணிவெடிகள் (landmines) என்றால் அது மிகையில்லை. இரண்டாம் உலகப்போர் நடந்துமுடிந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் கூட, அந்தப்போரில் இடப்பட்ட கண்ணிவெடிகள் இன்றும் அசம்பாவிதமாக சிறுவர்களையும் கால்நடைகளையும் பலிவாங்கி வருகின்றன. நின்று கொல்லும் என்பார்களே, கிட்டத்தட்ட அந்த வல்லமை பொருந்தியன கண்ணிவெடிகள். இந்த கண்ணிகளை இடுவதற்கு ஆகும் செலவும் மிகவும் குறைவு, இடுவது மிகவும் எளிது; ஆனால் இவற்றை அடையாளம் காண மிக அதிகம் செலவாகின்றது, அகற்றுவது மிகவும் அபாயகரமான செயல். கண்ணிவெடிகள் போருக்கென்று இருக்கும் சில நெறிமுறைகளுக்குக் கட்டுப்படுவதில்லை. எப்படிப்பட்ட கடுமையான போர் என்றாலும் அதில் படைவீரர்களை விடுத்த குடிமக்களை இலக்காக்குவதில்லை. ஆனால் கண்ணிவெடிகளுக்கு இந்த வரைமுறையெல்லாம் கிடையாது. இவற்றால் மூன்று வயது குழந்தைகூட உயிரிழக்கக் கூடும். 

கண்ணிவெடிகள் 

பூமிக்கடியில் புதைக்கப்பட்டு மேலே நடமாடும் உயிரினங்களாலோ, ஊர்திகளாலோ தூண்டப்பட்டு சேதம் விளைவிக்கக்கூடியவற்றுக்குக் கண்ணிவெடிகள் என்று பெயர். இவை பொதுவாக இருவகைப்படும்; மனிதர்களுக்கு எதிரான வெடிகள் (antipersonnel mines) மற்றும் ஊர்திகளுக்கு எதிரான (anti tank mines) வெடிகள். இவற்றை முறையே மனிதக்கண்ணிகள் என்றும் ஊர்திக்கண்ணிகள் என்றும் அழைப்போம். இவை ஒரு சிறிய உலோகக கலனில் (கிட்டத்தட்ட பள்ளிச் சிறுவர்களின் மதிய உணவுப் பாத்திரம் அளவில்) இருக்கும், உள்ளே அழுத்தத்தினால் வெடிக்கக்கூடிய வெடிமருந்துகள் திணிக்கப்பட்டிருக்கும். மூன்று வித வேதிப்பொருள்கள் இவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன; டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், பிஇஈடிஎன் என்பன இவை (அடிக்கடி மதக்கலவரங்களையும், மாபியாக் குழப்பங்களையும் அனுபவித்துவரும் நமக்கு இந்த வெடிமருதுகளின் பெயர்கள் பழக்கமாகிவிட்டன). மேலே ஒரு சுருள்வில்லும், காலடி அழுத்த ஒரு உலோகத்தகடும் பொதிக்கப்பட்டிருக்கும். மனிதக்கண்ணிகள் பெரும்பாலும் பூமிக்கு வெகு அருகிலேயே புதைக்கப்படும் 10 கிராமிலிருது இருநூற்றம்பது கிராம் வரை வெடிமருந்து உடைய அளவில் சிறியதான இவை இரண்டு கிலோ எடை அழுத்தத்தாலேயே வெடிக்கக் கூடியவை. ஊர்திக்கண்ணிகள் சற்று ஆழத்தில் புதைக்கப்படும். சில சமயங்களில் இவற்றில் பத்து கிலோ வரை வெடிமருதுகள் திணிக்கப்படும் – வெடித்தால் ஒரு பெரிய அடுக்குமாடிக்கட்டிடமே தூள்தூளாகக் கூடும், இவற்றின் மேல் நடக்கும் மனிதர்களாலோ கால்நடைகளாலோ இவை தூண்டப்படுவதில்லை. இவற்றை வெடிக்கவைக்க குறைந்தது 100 கிலோ எடை அழுத்தம் தேவை. 

இன்னொருவகையில் பார்க்கப்போனால் இவற்றை இரண்டுவகையாக்கலாம்; ஒற்றைப் புதைக் கண்ணிவெடிகள் (single ballast mines) மற்றும் சிதறுண்ட கண்ணிவெடிகள்.(fragmented mines) ஒற்றைக் கண்ணிவெடிகள் பெரும்பாலும் சாதாரணமானவை, இவை குறைந்த அழுத்த்தால் அங்கேயே வெடித்து, மேலே அழுத்தும் பொருளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடியவை. சிதறுண்ட கண்ணிவெடிகள்தான் மிகவும் சிக்கலானவையும் அபாயகரமானவையும். இவற்றின் மேலே செல்லும் உயிரியால் அல்லது வாகனத்தால் இவற்றின் இழுவிசை தூண்டப்படுகின்றது, ஒன்றுக்கு மேற்பட்ட வெடிகள் இந்த இழுவிசையால் இவை செயல்திறன் பெருகின்றன. கிட்டத்தட்ட 50 மீட்டர் சுற்றளவில் பல வெடிகள் ஒரே சமயத்தில் வெடிக்கக் கூடும். இவற்றில் சில வெடிப்பதற்கு முன்னால் தரையிலிருந்து மேலெழும்பும், கிட்டத்தட்ட ஒரு 5 வயது சிறுவனின் தலையுயரத்திற்கு வந்து வெடிக்கும். தரைக்கு மேல் வெடிப்பதால் இவற்றின் சேத அளவு மிகவும் அதிகம்.
 
 

இவற்றுக்கான வெடிமருதுகள் எளிதில் கிடைக்கின்றன, பாறைப் பகுதிகளில் கிணறு தோண்டப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளால் இவற்றைத் தயாரிக்க முடியும். இவற்றைச் சிறு குழிதோண்டி கையாலேயே புதைக்கலாம், அல்லது சிறிய உழவுக்கருவிகளால் தரையில் பதிக்கலாம். சில கடுமையான போர்க்களங்களில் வானத்திலிருந்து எய்து தரையில் பதிக்கவும் செய்கின்றார்கள். பெரும்பாலான நேரங்களில் இவற்றை போர்வீரர்களும், கெரில்லா போராளிகளும் தாங்கள் போகும் வழிகளில் எதிரிகள் பின்தொடராமல் இருக்க மனம்போனபடி பதித்துச் செல்லுகின்றனர். 

போர்க்களங்களில் மாத்திரமல்லாது சிறு குழுத் தகராறுகளிலும் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1999 செப்டம்பரில் நடந்த இந்திப் பாராளுமன்ற இடைத்தேர்தலின் போது பிகாரில் ஒட்டுப் போட வந்தவர்களைத் தடுக்க எதிரிக் குழுக்கள் இட்ட கண்ணிவெடிகளால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்தப் பிரச்சினை இராணுவத் தகராறுகளையும் கடந்து சேதம் விளைவிக்கவல்லது 

பாதிப்பு எவ்வளவு ?

இந்தக் கட்டுரையின் நோக்கம் கண்ணிவெடிகளையும் அவற்றை தயாரிப்பது எப்படி என்பது குறித்தும் சொல்லுவதல்ல. ஏற்கனவே இணையத்தில் அபாயகரமான தகவல்கள் நிறைய இருக்கின்றன என்று பலரும் பயப்படுகின்றார்கள். அத்தகைய தகவலை அதிகரிப்பது அடியேனின் நோக்கமல்ல. நாம் இங்கு காணப்போவது கண்ணிவெடிகளை அடையாளம் கண்டு அழிக்கும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களைக் குறித்து; அதற்கு முன் இந்த்ப் பிரச்சனையின் தீவிரத்தைச் சற்று உணருவோம். 

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 11 கோடி மனிதக் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு தெரிவிக்கின்றது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தொடங்கிய இவை இப்பொழுதும் ஆண்டுக்கு முப்பது இலட்சம் பதிக்கப்படுகின்றன. இவற்றுகெதிரான ஐ.நா ஒட்டாவா ஒப்பந்தம் 1997ஆம் ஆண்டு பலநாடுகளால் கையொப்பமிடப்பட்டது, எனினும் இன்றும் இவை புதிதாக உருவாகிவருகின்றன. ஆப்கானிஸ்தான், அங்கோலா, போஸ்னியா, கம்போடியா, ஈராக், மொசாம்பிக், நிக்ராகுவா, சோமாலியா, தாய்லாந்து போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டவை. இவற்றில் கம்போடியாவும் போஸ்னியாவும் மிகவும் மோசம், இந்த இரு நாடுகளிலும் அவற்றின் பரப்பளவில் சராசரி ஒரு மைல் சுற்று வட்டத்திற்கு 150 கண்ணிவெடிகள் உள்ளன. கம்போடியாவில் மாத்திரம் 35,000 பேர் கண்ணிவெடிகளால் அங்கங்களை இழந்து உயிர்வாழ்ந்து வருகின்றார்கள் (இறந்தவர்களின் எண்ணிக்கை இதற்கும் அதிகம்). ஈழத்தின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்கு கண்ணிவெடிகளைத் தாங்கி வருவதாகவும், மாதத்திற்குக் குறைந்தது பத்து குடிமக்களாவது இவற்றால் பாதிக்கப்படுவதாகவும் ஐ.நாவின் தகவல் தெரிவிக்கின்றது. புதிதாக கண்ணிவெடிகளைப் புதைப்பது இன்றிலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டாலும், இன்னும் சிலநூறு ஆண்டுகளுக்கு இவற்றின் பாதிப்பு தரைக்கடியில் தள்ளிப் போடப்பட்டிருக்கின்றது. இவை பெரும்பாலான இடங்களில் குத்தகைத் தொழிலாளிகலால் அகற்றப்படுகின்றன, இன்னும் பல இடங்களில் மனிதாபிமான சேவகர்களால் செயலிழக்கச் செய்யப்படுகின்றன. ஒரு போர் சமயத்தில் வீரர்களால் ஒரு சில கண்ணிகள் அகற்றப்பட்டோ, அப்புறப்படுத்தப்பட்டோ போக்குவரத்துப் பாதை திருத்தப்படுகின்றது, இதற்கு மொத்த வெடிகளில் 10 சதவீதத்தை அகற்றினால் போதும், ஆனால் சமாதானக் காலங்களில் 95 சதவீதமாவது அகற்றப்பட வேண்டும். 

உலகின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் முன்னனி கண்ணிவெடி உற்பத்தி நாடுகள்; சீனா, இத்தாலி, முன்னாள் சோவியத் மற்றும் அமெரிக்கா. இந்தியா பாக்கிஸ்தான் போர்களின் போதும் இவை பயன்படுத்தப்பட்டன.

தற்கால கண்ணிவெடித் தொழில்நுட்பம்

இரண்டாம் உலகப்போரில் இடப்பட்ட கண்ணிவெடிகள் மிகவும் சாதாரணமானவை. போர்த்தொழில் நுட்பத்தில் பொதுவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் தற்காலக் கண்ணிவெடிகள் மிகவும் சிக்கலாக மாறியுள்ளன.

பிளாஸ்டிக் வெடிகள்: இவை உலோகக் கண்டுபிடிப்பிகளால் (metal detectors) உணரமுடியாதவை

தொலைவிலிருந்து இடுதல்; போர்விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களால் இடப்படுபவை. இவை எங்கு பதிகின்றன என வரைபடம் எடுப்பது கடினம்.

தொடமுடியாத வெடிகள்: இவற்றை அழிக்க முற்பட்டால் உடனே வெடிக்கும். இட்டவர்களால்கூட அகற்ற முடியாது.

சுய அழிப்பு கண்ணிவெடிகள்; இவை குறித்த காலத்திர்குப் பிறகு தாமாக செயலிழக்கும். ‘மனிதாபிமான வெடிகள் ‘ என்று செல்லமாக அழைக்கப்படும் இவற்றுக்கும் குழந்தைகளை அடையாளம் காணத்தெரியாது.

அடையாளங் காணுதல், அகற்றுதல், செயலிழகச் செய்தல்

பெரும்பாலான சமயங்களில் இவற்றை ஒரு நீளமான கம்பின் நுனியில் பொருத்தப்பட்ட உலோகக் கண்டுபிடிப்பியின் மூலம் அறிகின்றார்கள், பின்னர் மண்வெட்டி, கடப்பாரை முதலிய சாதாரண ஆய்தங்களின் மூலம் பெயர்த்தெடுக்கின்றார்கள். பல சமயங்களில் உலோகக் கண்டுபிடிப்பிக்குப் பதிலாக மோப்ப நாய்களைப் பயன்படுத்துகின்றார்கள். இவை மிகவும் கடினமான முறைகள் நாடுமுழுவதிலும் அங்குல அங்குலமாக நாயை விட்டு மோப்பம் பிடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமானது அல்ல. கண்ணிவெடி நுட்பம் முன்னேறிய அளவிற்குச் செயலிழக்கச் செய்யும் நடைமுறைகள் வளரவில்லை. வழக்கம் போல முன்னேறிய நாடுகளால் உருவாகும் இந்தப் போர் நுட்பம், வளர்ச்சி குறைந்த ஏழை நாடுகளைத்தான் அதிகம் பாதிக்கின்றது. இன்றும் கூட நெல் விதைக்க உழும் உழவர்கள் கம்போடியாவில் கண்ணிவெடிகளால் உயிரிழக்கின்றார்கள். 

உலோகக் கண்டுபிடிப்பி ஒரு கம்பியினாலான வளையம், இது உலோகப் பொருள்களுக்கு அருகில் வரும்பொழுது மின்தூண்டல் (induction) ஏற்படுகின்றது. இத்தகைய கண்டுபிடிப்பிகள் விமான நிலையங்களில் தனிநபர் சோதனைகளிலும், நம் ‘மாண்புமிகு ‘-க்கள் வருகையின் போதும் மிகவும் பயன்படுகின்றன. எனினும் தரைக்கடியில் புதையுண்ட வெடிகளைக் காண இவற்றை மிகவும் சக்தியுள்ளதாக மாற்றவேண்டும்; அப்பொழுது ஒரு சிறிய சாக்லேட் உறைகூட எச்சரிக்கைத் தந்து எரிச்சலூட்டக் கூடும்.

முன்னேறிய நாடுகளில் தரைக்கடியில் ஊடுருவி காணக்கூடிய ரேடார்களைப் பயன்படுத்துகின்றார்கள். இவை விலை மிகுந்தவை, மேலும் அடர்ந்த காடுகளையுடைய மொசாம்பிக் போன்ற நாடுகளில் இவை பயனற்றவை. 

வேதிக் குறிப்புகள்

அமெரிக்க இராணுவ ஆராய்ய்சி நிறுவனம் ‘நாய்மூக்கு ‘ (Dog ‘s Nose) எனப்பெயரிடப்பட்ட ஒரு அறிவியல் திட்டத்தை மேற்க்கொண்டுள்ளது. நாய்கள் மோப்பம் பிடிப்பதைப்போல் வெடிமருந்துகளையும் போதைமருந்துகளையும் வேதியியல் தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட மோப்பக்கருவிகளால் அடையாளம் காணுவது அது. இதன் அடிப்படை அனுக்கரு நாற்துருவ ஒத்திசைவு (Nuclear Quadrupole Resonance, NQR) எனும் இயற்பியல் விளைவாகும். இதில் தோராயமாக 30 செ.மி விட்டமுள்ள தாமிர வளையம் இருக்கும், ஒத்திசைவுக்கருவி இதன்மூலம் வானொலியில் பயன்படுத்தப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை நிலத்தை நோக்கிச் செலுத்தும், எதிரொளிக்கப்படும் அலையின் தன்மை தரைக்கடியில் இருக்கும் பொருளின் வேதிக்கலவைக்கு ஏற்றபடி மாறும்; வெடிமருந்துகள் காணப்பட்டால் உடனே ஒலியெழுப்பும். இம்முறையின் முக்கிய முன்னேற்றம், சாக்லேட் உறை போன்றவற்றால் பாதிக்கப்படாவெடிமருந்துகளை மாத்திரமே அடையாளம் காட்டுவது. இது வேதிப்பொருளை நேரடியாக உணருவதன் மூலம் சாத்தியமாகின்றது. 

இம்முறையின் மூலம் ஆர்டிஎக்ஸ் ஐ அடையாளம் காணுவது மிகவும் எளிது. மேலும் உலோகம் குறைவாகப் பயன்படுத்தப்படும் பிஈடிஎன் வகை வெடிமருந்துகளும் இதனால காணப்படும். படத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்த முக்கியமான வெடிமருந்துகளின் அமைப்பைக் கண்டால் இவை எல்லாமே NO2 எனும் வேதிப்பொருளின் அடிப்படையிலானவை எனத் தெரியும். எனவே இந்தக்கருவியை NO2 க்கு மாத்திரம் மிகவும் துல்லியமாக மாற்ற முடியும். மேலும் இந்தக்கருவி வழக்கமான உலோகக் கண்டுபிடிப்பி போலல்லாது ஆர்டிஎக்ஸ் மற்றும் டிஎன்டிக்கு இடையிலான வித்தியாசத்தையும் காட்ட வல்லது. இதனால் குறிப்பிட்ட அகற்றுமுறையை எளிதில் கைக்கொள்ளலாம்.

 

இந்த ஒத்திசைவுக் கருவி திரவ அடிப்படையிலான வெடிமருந்துகளை அடையாளம் காணாது. ஆனால் கண்ணிவெடிகளில் 98% திடப்பொருள்களே, எனவே இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. மேலும் அடிப்படையில் இந்தக்கருவி கடின உலோக உறையிட்ட வெடிகளைக் காணாது, ஆனால் தற்பொழுது குவாண்டம் மாக்னெடிக்ஸ் எனும் நிறுவனம் இத்தகையை சூழ்நிலைகளில் இதன் தாமிரவளையம் ஒரு சாதாரண உலோகக் கண்டுபிடிப்பியாகச் செயல்படும் வகையில் மாற்றியமைத்துள்ளது. இது தற்பொழுது போஸ்னியா போன்ற இடங்களில் களச்சோதனையில் உள்ளது.

நாய் மட்டும்தானா மோப்பமிட முடியும் ?

என்னதான் இருந்தாலும் இதுவரை பயன்முறையிலுள்ள கருவிகள் அங்குல அங்குலமாக அலசத்தான் உதவுகின்றன. எப்படிக் கண்ணிவெடிகளைப் பதிப்பதில் எந்த சிரமமும் இல்லையோ அதேபோல் சிரமமின்றி இவற்றை அடையாளம் காணுவதால்தான் இவற்றின் முற்றிலுமாக ஆபத்தை நீக்கவியலும். நாய்களைப் போலவே தேனீக்களும் மோப்பசக்தி அதிகம்; இவைகளையும் நாய்களைப்போல பழக்கவியலும். முதலில் இவற்றுக்கு ஆர்டிஎக்ஸ் போன்றவற்றுக்கருகில் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுகளை இடுவார்கள் பின்னர், பழக்கத்தில் இவை கண்ணிவெடிகளிருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் கண்டு அருகில் செல்லும், இவற்றின் பாதையை அடையாளம் கண்டு, ஒரு பெரும் பரப்பில் கண்ணிவெடி இருக்கும் தடத்தை எளிதில் குறுக்க முடியும். இன்னும் ஒரு முறையில் இவற்றின் மேல் ஒருவித ஒளிரும் வண்ணத்தைப் பூசுகின்றார்கள்; இவ்வண்ணக்கலவை வெடிமருந்துகளுக்கு அருகில் வரும்பொழுது பளிச்சென்று ஒளிரும்; இரவில் இத்தகையை இடங்களை எளிதில் அடையாளம் காணலாம். இதே முறைக்கு இப்பொழுது சில பட்டாம்பூச்சிகளையும் பழக்கிவருகின்றனர். இத்தகைய ஆய்வுகள் ஓக் ரிட்ஜ் தேசிய ஆராய்ச்சிக் கூடத்திலும், மினிசோட்டா பல்கலையிலும் தீவிரமாக முன்னேறி வருகின்றன. 

உயிர்தொழில் நுட்பம்

விரைவாக வளர்ந்துவரும் உயிர்தொழில் நுட்பம் இந்த மனிதாபிமான சவாலுக்கும் விடைகாண முற்பட்டு வருகின்றது ஒருவகை நுண்ணுயிரிகள் டிஎன்டி இருக்குமிடங்களில் அதிவேக இனப்பெருக்கம் செய்ய வல்லனவாக மரபு மாற்றப்பட்டுள்ளன. இவற்றின் கரைசல்களை அந்தியில் தரையில் தெளித்தால் நள்ளிரவுக்குள் இவை வெடிமருந்து இருக்குமிடங்களில் பல்கிப் பெருகிவிடுகின்றன. இரவில் விமானத்திலிருந்து ஒருவித வேதிக்கலவையைத் தெளிக்கின்றார்கள்; இது இவ்விடங்களில் திட்டுதிட்டான வண்ண அடையாளமாக நுண்ணுயிரிகளால் மாற்றப்படுகின்றன. விடியலில் கண்ணிவெடிகள் குறியிடப்பட்டு அழிக்கத் தயார் நிலையில் இருக்கும். இன்னும் ஆய்வகச் சோதனைகளிலேயே இருக்கும் இம்முறைதான் எல்லாவற்றையும் விட மிகவும் பயனுள்ளதாக மாறச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டனாலும் ஜெர்மனியினாலும் பரந்த எகிப்திய பாலைகளில் புதைக்கப்பட்ட வெடிகளை அடையாளம் காண இதைவிட்டால் வேறு சிறந்த வழி இப்போதைக்குத் தென்படவில்லை.

இராணுவம், அரசியல் – கேலிக்கூத்து

கண்ணிவெடிகளுக்கு எதிரான பல முயற்சிகள் தன்னார்வ இயக்கங்களாலும், சர்வதேச அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன. காலஞ்சென்ற பிரிட்டனின் இளவரசி டயானா தனிப்பட்ட முறையில் கண்ணிவெடி ஒழிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் ஆதரவு திரட்டி வந்தார். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தையும் இதற்கு ஆற்றிய பங்கையும் கருத்தில் கொண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ‘கண்ணிவெடிகளுக்கு எதிரான பன்னாட்டு இயக்கம் ‘ தன்னார்வ அமைப்பிற்கு 1997 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 

இதே ஆண்டில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் கனடாவின் ஒட்டாவா நகரில் கூடி ஒரு ஒப்பந்தத்தை வடித்தார்கள். இதில் கையொப்பமிட்ட நாடுகள் இனிமேல் மனிதக் கண்ணிவெடிகளை இடுவதில்லை, கையிருக்கும் பயன்படாத வெடிகளை நான்கு ஆண்டுகளுக்குள் அழிப்பது, இவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி சில நாடுகள் தம்மிடமிருந்த வெடிகளை அழித்துவிட்டனர். பிரிட்டிஷ் இராணுவம் தனது கடைசி கண்ணிவெடியை அக்டோபர் 1999ல் இராணுவ அருங்காட்சியகத்திற்கு அளித்துவிட்டது. வழக்கம்போல் இந்த பன்னாட்டு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்ட அமெரிக்கா இதனைத் தன் நாடாளுமன்றத்தில் தீர்மானித்து ஏற்கவில்லை. அந்நாட்டில் தீவிரமாகச் செயல்படும் ஆயுத ஆதரவுக்குழுக்கள் இந்த ஒப்பந்த நடைமுறையாக்கலைத் தடுத்து வருகின்றனர். இந்த வகையில் கியோத்தோ மாசுக்கட்டுப்பாடு, அணுசக்தி ஆயுதப்பரவல் தடுப்பு போன்ற பல பன்னாட்டு ஒப்பந்தங்கள் அமெரிக்காவினால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. உலக அமைதியை முன்னின்று கண்காணிக்கும் வல்லரசாகத் தன்னை முன்னிருத்திக்கொள்ளும் அமெரிக்காவின் இந்த்தகைய நடவடிக்கைகள் கேலிக்கூத்துகளாக உள்ளன. ஒட்டாவா ஒப்பந்தத்தை முழுமனதுடன் ஏற்பதாகக் கூறும் தென்கொரியா, தனது சகோதர நாடான வடகொரியாவுடன் இருக்கும் இராணுவப் பகையை முன்வைத்து இதில் கையொப்பமிட மறுக்கின்றது. எந்த விதிகளுக்கும் கட்டுப்படாத பன்னாட்டுத் தீவிரவாத அமைப்புகள் எதைப்பற்றியும் கவலைப் படாது புதிதாக கண்ணிவெடிகளை மனம்போனபடி புதைத்து வருகின்றன. கம்போடியா, மொசாம்பிக், அங்கோலா போன்ற ஏழை நாடுகளில் நாள்தோறும் சிறுவர்களும் கால்நடைகளும் உயிர் இழந்தும் அங்கம் சிதைந்தும் வருகின்றனர். எத்தகைய அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் ஆள்வோர்களின் முழுமனதில்லாமல் குடிமக்களுக்கு நன்மைகள் விளையப் போவதில்லை. 

தோக்கியோ,

 15.7.2000
 

நன்றி; இக்கட்டுரையை எழுத சில குறிப்புகளை அடையாளம் காட்டிய என் நண்பர், ஈழத்துக் கவிஞர் திரு. கந்தையா இரமணீதரன் அவர்களுக்கு.

————–

 தொடர்புள்ள இணையப்பக்கங்கள்

கண்ணிவெடிகளுக்கு எதிரான பன்னாட்டு இயக்கத்தைதின் நோபல் சமாதனப் பரிசு ஏற்பு உரை http://www.nobel.se/peace/articles/williams/index.html

இந் நிறுவனத்தின் இணையப் பக்கங்கள் http://www.icbl.org/

பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் கண்ணிவெடிகள் குறித்த பக்க்ங்களுக்கு 
http://www.icrc.org/

அமெரிக்க இராணுவத்தின் ‘நாய் மூக்கு ‘ திட்டத்தின் அதிகாரபூர்வமான அறிக்கைகள்
 http://www.darpa.mil/ato/programs/uxo/default.htm

கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கையாளுவதைக் குறித்த ஐக்கிய நாடுகளின் நடைமுறைக் கையேடு
 http://www.linder.com/berserk/mines.html

Sniffing out danager, Richard Stevenson, Chemistry in Britain, May 2000 pp.36-40
 
 
 
 


  • காலடியில் புதையுண்ட எமன் – கண்ணிவெடிகள்

வெங்கடரமணன்.

வெங்கடரமணன்.