கணினிக்கட்டுரைகள் – 3 –

This entry is part [part not set] of 11 in the series 20000618_Issue

மா.பரமேஸ்வரன்


3. இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால் ‘மோடம் ‘ (Modem) என்றொரு கருவி நமது கணினியில் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறார்களே- அந்த மோடம் என்றால் என்ன ? அதன் பயன் யாது ? மோடம் இல்லாமல் நாம் இணையத்தைப் பயன்படுத்தமுடியாதா ?

இவற்றைப்பற்றி சிந்திப்பதற்கு முன்பு நாம் இணையம் பற்றிய சில பொதுவான விசயங்களை அலச வேண்டியுள்ளது. ‘இணையம் ‘(Internet) உலகமுழுதும் இலட்சக்கணக்கான கணினிகளை இணைக்கும் ஒரு வலைப்பின்னல் என்பது நாம் அறிந்ததே. அதோடு அக்கணினிகள் தொலை பேசிக்கம்பிகள் (Telephone Cable) வழியாக இணைக்கப்பட்டுள்ளன என்பதும் நமக்குத்தெரியும். ஏன் இவை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன ? தனியாக ஒரு cable network ஐ ஏன் இணையத்திற்கென பயன்படுத்தவில்லை ?

இதற்கு முக்கியமான காரணம் ஏதும் இல்லை, ஏற்கனவே தொலைபேசித் தொடர்பு உலகம் முழுதும் வந்துவிட்டது அதன் மூலம் உலகத்தின் எந்த மூலைக்கும் நாம் தொடர்புகொள்ள முடியும். இதற்காக தொலைபேசிக்கம்பிகள் (Telephone cable) உலகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டன. புதிதாக இணையத்திற்கொன கம்பிகள் அமைப்பது காலத்தையும், பணத்தையும் வீணடிப்பது ஆகும் எனவே இந்த, தொலைபேசிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தொலைபேசிக் கம்பிகளையே நாமும் இனையத்திற்காக பயனபடுத்தலாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால் இங்குதான் சிக்கல் ஆரம்பிக்கிறது, தொலைபேசிக்கம்பிகள் சாதாரண மிண்கடத்தி வகையைச்சார்ந்தவை அதாவது ஆங்கிலத்தில் ‘Ordinary Electricity cables ‘ அதனால் என்ன ? என்று கேட்கிறீர்களா! இந்த வகைக்கம்பிகளைத் தொலைபேசிதவிர நாம் நமது வீட்டில் மின்விசிறிகளைப் பொருத்துவதற்கும், மின்விளக்குகளை இணைப்பதற்கும் பிற மின்சாரத்தை கடத்தும் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இவைகளைக் கொண்டு இரண்டு கணினிகளை இணைத்தால் அந்த கம்பிகளின் மூலம் கணினியால் தகவல்களை பகிர்ந்துகொள்ள முடியாது.

இத்தகைய தொலைபேசிக்கம்பிகள் Analog Signal எனப்படும் அதிர்வலைகளை மட்டும் கடத்தும் திறன் கொண்டவை ஆனால் கணினிகள் தகவல்களை Digital Signal களாக உற்பத்தி செய்கின்றன. இத்தகைய கணினி உற்பத்தி செய்யும் Digital Signal களை கடத்தும் திறன் இக் கம்பிகளுக்கு இல்லை.

கணினிகளை நாம் Coaxial Cable எனப்படும் ஒருவகைக் கம்பிகளை கொண்டுதான் இணைக்க முடியும் இவைகளுக்குத்தான் கணினி உற்பத்தி செய்யும் தகவல்களை எடுத்துச்செல்லும் திறன் உண்டு. என்னடா இது Coaxial cable என்று குழம்ப வேண்டாம் நாம் நமது வீட்டில் செயற்கைக்கோள் தொலைக்காட்சிக்கு பயன்படுத்துகிறோமே ஒரு வகை உருண்டைக் கம்பிகள் அதாங்க Dish antenna வையும் receiver ஐயும் இணைப்பதற்கு அதே கம்பிகள்(Cable)தான். (அலுவலகத்தில் உள்ள கணினி வலைப்பின்னலில் பாருங்கள் இந்த மாதிரி உருண்டை கம்பிகளைத்தான்(cable) பயன்படுத்தியிருப்பார்கள்)

ஆனால் என்ன செய்வது! ஏற்கனவே இவ்வளவு தூரம் உலகமுழுதும் தொலைபேசிக்கம்பிகள் இருக்கின்றனவே, (இந்தியாவில் தனியாக கம்பிகளை நிறுவ வேண்டுமானால் இன்னும் ஐம்பது வருடம் சென்றுதான் இணையத்தை நாம் பயன்படுத்தமுடியும்) என்று சிந்தித்த விஞ்ஞானிகள், ஏன் இந்த கணினி உற்பத்தி செய்யும் Digital Signal ஐ Analog Signal ஆக மாற்றி தொலைபேசிகம்பி வழியாக அனுப்பி அடுத்த கணினியில் மீண்டும் அந்த Analog Signalஐ Digital Signal ஆக மாற்றி அதில் பயன்படுத்தக்கூடாது ? என்று முயன்றதால் வந்தது தான் இந்த ‘மோடம் ‘.

Modem – MOdulator DEModulator என்பதின் சுருக்கமே.

இதில் இரண்டுவகைக்கருவிகள் உள்ளன ஒன்று அதாவது Modulator கணினி உற்பத்தி செய்யும் தகவலை தொலைபேசிக்கம்பிகளில் செலுத்தும்வண்ணம் மாற்றுகிறது (Digital to Analog) அடுத்ததாக Demodulator என்னும் கருவி தொலைபேசிக்கம்பிகள் வழியாக வரும் தகவல்களை கணினி புரிந்துகொள்ளும் நிலைக்கு மாற்றுகிறது (Analog to Digital)

இப்பொழுது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் தொலைபேசிக்கம்பிகள் மூலமாக இணையம் கணினிகளை இணைப்பதால் தான் நாம் இந்த ‘மோடம் ‘ என்ற கருவியை நமது கணினியில் பயன்படுத்துகிறோம். இவ்வாறு தொலைபேசிக்கம்பியைப்பயன்படுத்தாமல் வேறு வகை அதாவது Coaxial வகை (cable)கம்பிகளைப் பயன்படுத்தினால் நமக்கு இணையத்தில் இணைவதற்கு மோடம் கருவி தேவையில்லை.

தற்காலத்தில், வளர்ந்துவிட்ட நாடுகளில் இணையத்திற்கென தனி Cable network (கம்பிப் பின்னல்)களை அமைத்திருக்கிறார்கள் இந்த வகை இணைய வலைப்பின்னல் அமைப்பில் தொலைபேசிக்கம்பிகளுக்குப் பதிலாக Optical Fibre என்னும் ஒருவித Cable களைப்பயன்படுத்துகிறார்கள் இவைகளில் மோடம் என்னும் கருவி பயன்படுத்தப்படுவதில்லை.

 

 

  Thinnai 2000 June 18

திண்ணை

Series Navigation

மா.பரமேஸ்வரன்

மா.பரமேஸ்வரன்