சந்திப்பு

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

அ.லெட்சுமணன்,


சாதாரணமாக துவங்கிய ஒரு நாளின் பகல் பொழுதில்
அலுவலக சிற்றுண்டி சாலையில் கல்லூரி கால
நண்பனை 15 ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக சந்தித்தேன்
சிரிக்க சிரிக்க பேசினோம்
கடற்கரைக்குப் போவது என்று முடிவானது
தத்தம் மனைவிக்கு அலைபேசியில் அழைத்து இரவு சாப்பாடு
வெளியில் என்றும் தாமதமாக வீடு திரும்புவோம் என்றும் தெரிவித்தோம்
குழந்தை, குடும்பம், வேலை, கல்லூரி ஆசிரியர் ராமசாமி,
கல்லூரி கால நண்பர்கள் சத்திய நாரயணன், அருண்குமார், கருப்பையா,
நண்பிகள் பற்றிய சுவாரசியங்கள் எல்லாம் பேசினோம்
பேச்சு நிகழ் காலத்துக்கு திரும்பியது
அலைபேசி மாடல், வீட்டு லோன், பள்ளி கூட அட்மிசன்
எல்லாம் பேசி ஆகி விட்டது
சிறிது நேரம் கடலை அமைதியாக வேடிக்கை பார்த்தோம்
இரவு சாப்பாட்டு நேரம் வரை பேச ஒன்றும் இல்லை என்றானது
வீட்டுக்கு கிளம்பினோம்
நண்பன் தந்த்துவிட்டு சென்ற அலைபேசிக்கு
இன்றாவது அலைத்துவிட வேண்டும்.

Series Navigation

அ.லெட்சுமணன்,

அ.லெட்சுமணன்,

சந்திப்பு

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

தமிழ்மணவாளன்


உன்னிடம் உரையாடுவதை விட எனக்கு
சுகமான தருணமேதும் வாய்ப்பதில்லை.
உன் சந்திப்பு நல்கும் மகிழ்ச்சியை
வேறெதன் வாயிலாகவும் பெறமுடியாதென்னால்.
மெல்லிய தூறல் கூடிய ஓர் அந்தியில்
நீ வந்து திரும்பியபோது
பெருமழை அடிக்கத்தொடங்கியதென்னுள்
உனது காலடி ஓசை
கவனத்தில் வரும் போதே
சந்தோஷமும் அச்சமும் மாறி மாறி
கதவுகளை மூடியும் திறந்தும்
அலைக்கழிக்கிறது.
ஆயினும்
அச்சத்தினூடாகவே எழும் சந்தோஷம்
மயக்கதிரவத்துள்
கரைக்கிறதெதையும்.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்

சந்திப்பு

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

காஞ்சனா தாமோதரன்


கப்பல் மேல்தளம் அரையிருளில் அமைதியாகக் கிடந்தது. நெருங்கிக் கொண்டிருந்த கரை மேல் நியூயார்க் மன்ஹாட்டனின் முப்பரிமாண மின்புள்ளிக் கோலம். ஹட்ஸன் நதி மேல் சரவிளக்கு வடிவங்களாய் மிதக்கும் பாலங்கள், படகுகள், கப்பல்கள். இலையுதிர்காலத்துக் காற்றின் குளிர் உற்சாகமாய் உணர வைத்து உடலை நடுக்கிற்று. சால்வையை இறுக்கிக் கொண்டேன். மேல்தளத்தின் கைப்பிடிச் சுவரை அணுகும்போதுதான், எனக்கு முன்னாலேயே வந்திருந்த இன்னொருவர் மறுகோடியில் நின்றிருப்பது புரிந்தது. அவரது தனிமையைக் கெடுக்க விரும்பாமல், விருந்தின் சிரிப்பொலிகளையும் பேச்சுகளையும் வெளிச்சத்தையும் நோக்கித் திரும்பினேன். பரவாயில்லை இருங்கள் என்று அவர் குரல் கேட்டது.

அவரது கணவர் வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர், உள்ளே பிறருடன் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருக்கிறார். இவர் விருந்தின் சம்பிரதாயப் பேச்சுகளை முடித்துக் கொண்டு இங்கே தப்பித்து விட்டார். துணைவியரும் இந்த அலுப்பூட்டும் தொழில்முறை விருந்துகளுக்கு வர வேண்டிய தேவையென்ன என்று அங்கு வந்திருந்த பெண்களுக்காக அனுதாபப்பட்டார். என் கணவரும் உள்ளே பிறருடன் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருப்பதைச் சொன்னேன். என் தொழில் நிமித்தமாக அங்கு வந்திருப்பதைச் சொன்னேன். சொல்லியிருக்க வேண்டாமோ என்றிருந்தது: விலகச் செய்யுமோ. விலகவில்லை. மெல்லச் சிரித்தவாறு பேச்சைத் துவக்கினார்.

–உங்களுக்கு நியூயார்க் பிடிக்குமா ?

–தணிக்கையின்றி முழு உலகத்தையும் ஒரே ஊரில் பார்ப்பது போன்ற உணர்வு. கலைந்து சிதறிக் கிடக்கும் ஒரு கலாச்சார அடகுக்கடை மாதிரி. வீடற்று வீதிவாழ்வோரும் ‘வால் ஸ்ட்ரீட் ‘ பங்குச் சந்தைக்காரரும் வேலைக்கு விரைவோரும் வீதியோர ‘ஜாஸ் ‘ இசைஞர்களும் ‘ப்ராட்வே ‘ நாடகக்காரர்களும் ‘க்ரீன்விச் வில்லேஜ் ‘ ஓவியர்களும் இனங்களின் நிறங்களும் உலகப்பயணிகளும் உலகமொழிகளும் நிரம்பி வழியும் வீதிகளில் உணரும் அந்த உயிர்த்துடிப்பு என் தாயகத்தை நினைவூட்டுகிறது; வேறுபாடுகளூடேயும் நெருக்கமாகிறது. ஒப்பீட்டில், நாங்கள் இப்போது வசிக்கும் ஊரின் வீதிகளெல்லாம் வாகனத் தடம் பதிந்த வெறுமைகளாகத்தான் தெரியும்.

–(பல படங்களிலும் தன் கேமராக் கண்வழியே நியூயார்க்கை மென்மையாய்க் காதலிக்கும் திரை இயக்குநர்) வுட்டி ஆலன் அளவுக்கு நியூயார்க்கைப் பிடித்திருக்கிறது உங்களுக்கு.

–வுட்டி ஆலனின் பார்வையிலிருந்து என் பார்வை நிச்சயம் வேறுபட்டதென்று நம்புகிறேன். யதார்த்த மிகுதியினால் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டதாய் எனக்கு நியூயார்க் தெரிகிறது. இன்னொன்று. நகரத்தின் நடுவில் ஒரு பெரிய காட்டை ‘சென்ட்ரல் பார்க் ‘காகப் பாதுகாக்கும் நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள். ஆனாலும், இன்னும் பல அழகிய காடுகளும் குன்றுகளுமான பசிய வளைவுகளை அழித்து, நேர்கோடுகளும் கூர்கோணங்களுமாய் இயந்திர யுக மனிதன் சமைத்த ஒரு மாபெரும் அபத்தமே நியூயார்க் என்று சொல்லவும் கேட்டிருக்கிறேன்.

–ஹட்ஸனுக்கு மேற்கேயுள்ள அமெரிக்கர்கள் எல்லாரும் அப்படித்தான் சொல்லுவார்கள்.

சேர்ந்து சிரித்தோம். திறந்த மனதுடன் பேசிச் சிரிப்பதில் எவ்வளவு நிறைவு! நான் தொடர்ந்தேன்.

–இடையறாத கலிஃபோர்னியக் கதிர்களுள் எத்தனை நிழல்கள் மறைந்து, எத்தனை பரிமாணங்கள் வெளிறித் தேய்கின்றன என்பது நியூயார்க்கை மீண்டும் பார்க்கும் போதே புரிகிறது. கென்னடி அல்லது லாகுவார்டியா விமான நிலையத்தை விட்டு வெளியேறி, நியூயார்க்கைச் சுவாசிக்க ஆரம்பித்ததும், ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படுவது அதிர்ச்சிதான். என் நினைவிலிருக்கும் நியூயார்க்கை விட, நேரில் பார்க்கும் நியூயார்க் அதிகக் காற்றோட்டமுள்ளதாய்க் குறைந்த கொலை-கொள்ளையுள்ளதாய் நிறைந்த தொடர்புள்ளதாய்த் தெரிகிறது. என் நினைவில் தெரியும் கறுப்பு-வெள்ளை நியூயார்க், நேரில் பார்க்கும் போது துடியான வண்ணங்களில் உயிர்க்கிறது.

–நான் பிறந்து சில காலம் வளர்ந்தது இங்குள்ள ‘பரோ ‘க்களில்தான்.

–நியூயார்க்குக்கு வேலைக்காக வந்தவர்கள் பலரைத்தான் இதுவரை சந்தித்திருக்கிறேன். நீங்கள் நியூயார்க்கிலிருந்து வருபவரா ?

–அப்பாவின் வேலையினால் அங்குமிங்குமாய் அலைந்ததில், பல இடங்களில் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் கேள்விக்கு நான் வழக்கமாய்ச் சொல்லும் பதில் ‘எங்கிருந்தும் வரவில்லை ‘ என்பதே.

–அப்பாவுக்கு என்ன வேலை ?

–பெரிய வேலை ஒன்றுமில்லை. ஒரு ரெயில்ரோடு நிறுவனத்தில் தட்டச்சு வேலை. அம்மாவின் குடும்பத்தினர் ரஷ்யாவிலிருந்து வெளியேறி இங்கு வந்தவர்கள். உயர்நிலைப்பள்ளி தாண்டாத அம்மாவுக்குத் தனது புலம்பெயர் நிலையை மீற வேண்டுமென்று ஓர் உறுதி. கஷ்டப்பட்டு வேலைகள் தேடி, எப்படியோ தக்க வைத்துக் கொண்டார். அந்த மாபெரும் பொருளாதாரச் சரிவு — ‘கிரேட் டிப்ரெஷன் ‘ — காலம் அது.

அது வேறு காலம்தான். பொருளாதாரச் சரிவுடன் இயற்கையும் பொய்த்த சூழலில், நொடித்த விவசாயிகள் அரசாங்கத்திடம் கூட்டமாய் முறையிடப் போய், வாஷிங்டன் வீதிகளில் இராணுவப் பீரங்கிகளைச் சந்திக்க நேர்ந்த காலம். (1930-கள்.)

–புலம்பெயர் நிலையை மீற வேண்டுமென்று உங்கள் அம்மா உழைத்ததாய்ச் சொன்னீர்களே…..

–உங்களுக்குப் புரியாததா ?

மெளனமானேன். என்னது புலம்பெயர் வாழ்வுதான். அதன் தன்மை பற்றி ஆசுவாசமாய் நினைத்துப் பார்த்திருக்கிறேனா ? நேரமிருந்திருக்கிறதா ? அவரே பேச்சைத் தொடர்ந்தார்.

–ஊர் ஊராய்ச் சுற்றியதில் வீடென்று அழைக்க எனக்கு ஓரிடம் கிடையாது. நிலைத்த நட்புகளும் கிடையாது. போன வருடம் நடந்த அதே பழையதே திரும்பத் திரும்ப நடக்கிறதே என்று தொடர்ச்சி பற்றி அலுத்துக் கொள்ளும் பாக்கியம் கிடையாது. ஆனால், இதிலும் ஒரு நன்மையுண்டு தெரியுமா ?

–சொல்லுங்கள்.

–என் ஞாபகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட பின்புலம் உண்டு. ஊர்வாரியாக ஒவ்வொரு நிகழ்வும் தனியாய், தலைப்புடன், ஒழுங்குடன் என் மனதில் அடுக்கப்பட்டிருக்கும். ஒரு நிகழ்வுக்கான தேதியைத் தேடுகிறேனென்று வைத்துக் கொள்ளுங்கள்–ஓ, அப்போது நான் லாஸ் ஆஞ்சலீஸில் இருந்தேன், எனவே அது 1972-வாகத்தான் இருக்கும் என்று சொல்லி விடலாம். ஆனால்….

அவர் குரல் தேய்ந்ததும், மன்ஹாட்டன் மேல் பதித்திருந்த பார்வையை அவர் பக்கம் திருப்பினேன். கம்பிக்கிராதி மேல் முழங்கைகளை ஊன்றிச் சாய்ந்தவாறு, கப்பல் கிழித்து விலக்கும் நுரையலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். விரல்களுக்கிடையே மெல்லச் சுழற்றிக் கொண்டிருந்த ‘க்ரிஸ்டல் ‘ கோப்பை மேலும், மண மோதிரம் மேலும் ஒளித்துகள்கள் மோதித் தெறித்தன. அவர் மீண்டும் பேசும் போது தன்னுடனேயே பேசிக் கொள்ளும் தொனி.

–என்னுடன் அந்தரங்கமான தொடர்புள்ள நிலப்பரப்பென்று ஒன்றுமில்லை. இப்படி நமக்கு நினைக்கத் தெரிவதற்கு முன்னாலேயே, நமக்கு ஓர் அடையாளம் தரும் நிலம். இந்த உண்மை நமது பிரக்ஞைக்கு எட்டியவுடன், நாம் அணைத்துக் கொள்ளும் அல்லது விட்டு விலகிச் செல்லும் நிலம். நம் சம்மதம் இல்லாமலேயே, நமது பார்வை இந்நிலத்தினால் உருவாகும், நம் ஆளுமையும் இதனாலேயே வரையறுக்கப்படும். எனக்கென்று அப்படி ஓரிடம் இல்லை. வெறுத்து ஒதுக்கவோ அல்லது திரும்பிப் போவது பற்றிக் கனவு காணவோ எனக்கென்று ஓரிடம் இல்லை.

–நீங்கள் இப்படிச் சொல்லுவது ஆச்சரியம்தான். என் பெற்றோரைப் போலவே, நான் விட்டு வந்த என் பிறந்த இடத்தையும் நான் மனமார நேசிக்கலாம், விமரிசிக்கலாம்–இன்று வரை பூரண உரிமையுண்டு எனக்கு. திரும்பிப் போவது பற்றிக் கனவு காண ஓரிடம் உண்டு. ஆனால், அந்த இடம் கடந்த காலத்தில் இருக்கிறதோ என்ற சிறு சந்தேகமும் உண்டு.

–இழந்த இலட்சியவாதம் என்று நினைத்து வேதனைப்படுவதற்காவது உங்களுக்கு ஓரிடம் இருக்கிறதே……உங்கள் நினைப்புத் தவறோ என்று சந்தேகமிருந்த போதிலும். எனக்கு அப்படியோர் இடமே இல்லை. உங்களுக்குள்ள வேர் எனக்கில்லை. இந்த நாட்டிலேயே பிறந்து இங்கேயே வாழும் நான்தான் நாடோடி.

–நியூயார்க்கில் பிறந்து சில காலம் அங்கேயே வளர்ந்திருக்கிறீர்களே. இது உங்கள் இடமில்லையா ?

–நீங்கள் பயணியாக வந்து போகையில் பிடிபடும் நியூயார்க் பற்றிச் சொன்னீர்கள். அது ஒரு தளம். இங்கே வாழ்கையில் நான் உணர்ந்த நியூயார்க் வேறு. துரதிர்ஷ்டவசமாக, வெறுப்பும் ஏற்படவில்லை. வெறுத்தாலாவது முற்றுமாய் ஒதுக்கி, வேரறுத்தேன் எனலாம். ஒரு வழுவழுத்த பாறைமேல் எப்படி எதுவும் ஒட்டாமல் வீழுமோ, அப்படித்தான் நியூயார்க்கும் என் நினைவுகளும். பணக்காரர்கள் போல் வானை விஞ்சும் வாழ்வும் இல்லை; ஏழைகளின் நிர்ப்பந்த நெருக்கமும் இல்லை. என்னைப் பற்றிப் பிறரும் அவர்களைப் பற்றி நானும் கவலைப்படாத, ஒட்டில்லாத நடுத்தர வர்க்கத்து வாழ்க்கை. அது உருவாக்கித் தரும் அழகியல் சூனியம். இந்தச் சூனியம் என்னுள்ளிருப்பதைப் புரிந்து கொள்ள எனக்கு நாளாயிற்று.

–மத்திய வர்க்கம் என்றாலே அழகியல் சூனியம்தான் என்று பொதுவாகச் சொல்லுகிறீர்களா ?

–என் அன்றைய சூழலை நான் இப்போது எப்படிப் பார்க்கிறேன் என்பது பற்றி நான் பேசுகிறேன்.

–சரி, அப்புறம் ?

–பிறகு சான்ஃப்ரான்ஸிஸ்கோ. எனக்குப் பிடித்திருக்க வேண்டிய, அழகிய இடம் அது. ஏனோ ஒட்டவில்லை. ஒருவிதமானத் தன்னிறைவில் திளைக்கும் தாமரைத்தின்னிகள் என்று தோன்றியது. அடுத்து மிஸ்ஸிஸ்ஸிப்பி.

–ஃபாக்னரின் பூமி. நான் அங்கு போனதில்லை.

–பெரிய பெரிய சிலந்திவலைகள் போல் ‘ஸ்பானிஷ் மாஸ் ‘ படர்ந்து தொங்கும் உயர்ந்து அகன்ற நிழல் மரங்கள், அடர்பச்சை ஸாட்டின் இலைகளினூடே வெண்டாமரை செந்தாமரை போல் மலர்ந்திருக்கும் மக்னோலியாக்கள்….

–மிஸ்ஸிஸ்ஸிப்பி, அலபாமா உள்பட்ட தென்மாநிலங்கள் எல்லாம் இனவெறுப்புள்ள பகுதிகளென்று கேள்விப்பட்டிருக்கிறேன். எந்த அளவுக்குப் பொதுமைப்படுத்த முடியுமோ தெரியவில்லை.

–பொதுமைப்படுத்த முடியும் என்பது என் தனிப்பட்ட அனுபவம். இப்போது மாறியிருக்கிறது, மறுக்கவில்லை. அந்தப் பழங்காலத்தில், கறுப்பினத்தவருக்கான பிரத்தியேகக் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்தேன். (இப்போது வீட்டுக்கு வெளியே வேலை பார்க்கவில்லை.) ஒரு வெள்ளைக்காரி அந்த வேலை பார்த்தது அங்குள்ள வெள்ளையருக்குப் பிடிக்கவில்லை. கறுப்பினத்தவர் என்னை முழுமையாய் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இரு தரப்புகளுமே என்னை ஒரு பாதுகாப்பான(!) தொலைவில் வைத்திருந்தன. உங்களுக்கு இந்த அனுபவம் ஓரளவு புரியுமென்று நினைக்கிறேன். ஹ்ம்ம்ம்ம்……. அப்புறம், நியூ இங்கிலாந்து பகுதிக்குப் போயிருக்கிறீர்களா ? (நியூ இங்கிலாந்து: ரோட் ஐலண்ட், மஸச்சூஸெட்ஸ், கனெட்டிக்கட், நியூ ஹாம்ப்ஷைர், மெய்ன், வெர்மாண்ட் ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் அடங்கிய அமெரிக்க நிலப்பகுதி.)

–ஆமாம். ஹார்வர்ட் பல்கலையில் தங்கியிருந்து மாணவர் குழுவாய், நியூ இங்கிலாந்து பகுதி முழுதும் சுற்றிப் பார்த்தோம். பாஸ்டனின் சரித்திர முக்கியத்துவம் தவிர்த்து, பெருநகரங்கள் ஒன்றுமே அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. வழுவழுச் செங்கல் பாவிய சாலைகளும், வெள்ளையடித்த மரத்தட்டி வேலியுள்ள காலனீய வீடுகளும், வெண்மைக் கூம்புக் கோபுரமுள்ள தேவாலயங்களுமாய், மரச்செறிவுகளின் நடுவே இளைப்பாறும் சிற்றூர்கள் அழகாய்த் தெரிந்தன. தலைமுறை தலைமுறையாய் ஆகி வந்த அந்த வீடுகளில் வாழ்பவர்கள் மரபில் வேரூன்றிய அமைதியான அன்பான வாழ்க்கை வாழுபவராய் இருப்பார்கள் என்ற நினைப்பு…..

–பார்த்தவுடனேயே அங்கு வாழ வேண்டுமென்ற ஆசை வரும், இல்லையா ?

–இல்லை. வாழமுடியாதென்று திட்டவட்டமாய்த் தெரியும். அந்தக் காலத்தில் எனக்கு வாய்த்த தனிப்பட்ட பார்வை இது. (பன்முகமல்லாத) மரபு வேரூன்றிய பூமி என்றேனே….அதற்கு நானும் எனக்கு அதுவும் அந்நியம்.

–எமிலி டிக்கின்சன் பிறந்து புனைந்த பூமி. ஆண்ட்ரூ வையெத்தின் ஓவியங்களில் உயிர்த்தெழும் பூமி. கதவிடுக்கு வழியே நான் கண்ட நியூ இங்கிலாந்து எனக்குப் பிடித்திருந்தது. எனக்கேற்ற அளவில் மரபும் எளிமையும் தனித்துவமும் அழகும் கலந்த இலட்சியவாத இடமாக அது இருந்திருக்க வேண்டும். ஏனோ ஒட்டவில்லை. நீங்கள் சொன்ன அதே உணர்வுதான் எனக்கும். மீண்டும் ஆச்சரியப்படாதீர்கள்.

நான் ஆச்சரியப்படத்தான் செய்தேன். மேலே பேசவில்லை. கப்பல் நின்றிருந்தது. இங்கேயா இருக்கிறீர்கள் என்றபடிக் கணவன்மார்கள் வந்து சேர்ந்தார்கள். விடைபெற்றுக் கொண்டோம்.

எதிர்பாராத இடங்களிலும் தருணங்களிலும் வாழ்க்கைக் கதைகளைக் கேட்க நேர்வது எனக்குப் புதிதல்ல. தற்காலிகம் நிரந்தரமாய்த் தெரிந்து நெருக்கத்தை உருவாக்கும் அரிய கணங்கள் அவை; தற்காலிகம்தானே என்ற அறிதல் தரும் பாதுகாப்பாகவும் இருக்கக் கூடும். வீடு திரும்பி, ஆசுவாசமாய் நினைத்துப் பார்க்கையில், இந்தக் குறிப்பிட்ட உரையாடல் என்னை வித்தியாசமாய்ப் பாதித்திருப்பதை உணர்ந்தேன். அலுப்பூட்டும் எழுத்து என்று முதலில் ஒதுக்கிய வில்லியம் ஃபாக்னரைச் சரித்திர-சமூகக்-கலாச்சாரப் புரிதலுடன் மீள்வாசிப்புச் செய்து, அவரது எழுத்துப் பரப்பை வியந்தது; (நியூ இங்கிலாந்துக் கரையோரமாய்க்) கடலினுள் நீளும் மரப்பாலத்து முனையில் நிற்பவன் பயணத்தைத் துவங்குபவனா முடிப்பவனா என்று ஆண்ட்ரூ வையெத் ஓவியத்தின் முன் நின்று குழம்பியது; ‘to make a prairie it takes a clover and a bee ‘ என்ற எமிலி டிக்கின்சன் வரியிலுள்ள படிம/அர்த்த அடுக்குகளை ரசித்தது; எல்லாம் துண்டு துண்டாய் நினைவில் வந்து போயின. அது வேறு காலம்; ஒரு நாளுக்கு இருபத்தேழு மணிநேரத்தைக் கோரி நிற்காத காலம். வர்த்தக விருந்துச் சூழல்களில் அந்தச் சினேகிதி போன்றவர்களைச் சந்திப்பது அரிது. அதனால்தான் அச்சந்திப்பு முக்கியமாய்த் தெரிகிறதோ என்று அதைப் பதிவு செய்கையில் நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பையும் பதிவு செய்தேன்.

* * * * * *

ஒரு புத்தகப் பொட்டலம் என் பெயருக்கு வந்திருந்தது. எங்கள் பழைய முகவரிக்குப் போய் ஏமாந்து, இறுதியில் எங்களது தற்போதைய முகவரியைக் கண்டுபிடித்து வந்திருக்கிறது. நான்கு புத்தகங்கள், ஒன்று இந்த வருடத்திய வெளியீடு. பின்னட்டைப் படத்து முகம் பரிச்சயமானதாய்த் தெரிந்தது. சில வருடங்களுக்கு முன், ஹட்ஸன் நதிக்கரையின் ஒளியும் நிழலும் வேய்ந்த முகமாய் நான் பார்த்தது.

கூடவே வந்த கடிதத்தின் சாராம்சம்: ‘உங்களையும் உங்கள் கணவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. அந்தச் சூழலில் உங்களுடன் பேசியது எனக்கு ஆசுவாசமளித்தது. ரஷ்ய-அமெரிக்கரான என் அம்மாவின் குடும்பம் துவங்கித் தற்காலம் வரையிலான பன்னாட்டு குடியேறு சமூகங்களையும் கூர்ந்து கவனிக்கும், ஆய்வு செய்யும் வாய்ப்பு எனக்குத் தொடர்ந்து கிடைத்திருக்கிறது. அவர்களுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாய் உணருகிறேன். அவர்களது ஏக்கம் ஒரு நிஜமான இடத்தை, சமூகத்தைப் பற்றியது. உங்களைப் போல், சமூகம் என்பதை உணர்ந்தவர்களை, ஆழமாய் ஊன்றிய வேருள்ளவர்களைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன். சில நிர்ப்பந்தங்களால் வீடு துறந்து இங்கே வந்த என் பாட்டி-தாத்தா கூட, தாம் இழந்ததை இலட்சியவாதமாக்கி, அந்த நினைவில் ஆறுதல் கொள்ளலாமே என்று ஏங்கியிருக்கிறேன். ஒரு வேளை, அது ஆறுதலே அல்லாமல், வலிகளில் மிகக் கூர்மையானதாய் இருக்குமோ ? எனக்குப் புரியாதவை பல. வந்தேறுகுடிகளான என் பாட்டியும் தாத்தாவும் அமெரிக்காவில் ‘ரஷ்யனாக ‘ இருக்க முயற்சித்தார்கள். என் அம்மா தன் வந்தேறுகுடிக் குடும்பத்தின் தளைகளை உடைத்து ‘அமெரிக்கனாக ‘ முயற்சித்தார். நானோ என்றுமே அறிந்திராத (எங்குமே இல்லாத ?) ஓர் ஈடன் வனத்தை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அனுப்பியுள்ள எனது புத்தகங்களிலும் அந்த உணர்வே அடிநாதமாகிறது… ‘

புத்தகங்களை ஆழ வாசித்துப் பதிலெழுதச் சில மாதங்கள் தேவைப்பட்டன. அவரது எழுத்தின் சாரமும், தொனியின் நேர்மையும் சமநிலைப் பண்பும், வாசிப்புக்கு நேரம் ஒதுக்கக் கட்டாயப்படுத்தின. எழுத்தாளரோ விமரிசகரோ அல்லாத நான், முறையான புத்தக மதிப்புரை/ விமரிசனம் அல்லாத என் எளிய வாசகக் கருத்தை அவருடன் பகிர்ந்து கொண்டேன். கூடவே, என் மனதில் பட்டவற்றையும் இறுதியில் எழுதினேன்; அவற்றின் சாராம்சம்: ‘எங்கிருந்து வருகிறேன், எங்கே வளர்ந்தேன் என்பவையெல்லாம் அனுபவமும் கற்பனையும் காலமும் சந்திக்கும் அகத்தளத்தில் பதிலளிக்கப்பட வேண்டிய தனிப்பட்ட கேள்விகள். நிலையான பிறப்பிடத் தகவலுக்கும், மாறிக் கொண்டேயிருக்கும் கனத்த அனுபவத்தின் மையத்துக்கும் இடையே தொலைவுகள் விரிவது இயல்புதானோ ? இத்தகைய தொலைவின், இழப்பின், அந்நியத்தின், தனிமையின் நடுவில், ஒரு வினோதமான விடுதலை உணர்வையும் — அறிந்தேதானோ அல்லாமலோ — கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். ஒரு வகையான இறப்பு தரும் விடுதலை. (பின்னால் வரும் இறப்புகள் ஏதும் அந்த முதல் இறப்புப் போல் இருப்பதில்லை.) நம் கேள்விகள் சில இடங்களில் சந்தித்து உரசுகின்றன. என் கேள்விகளையும் முரண்களையும் வருங்காலத்தில் நான் அலசக் கூடும், அல்லது மழுங்கடித்து மறக்கக் கூடும். என்னிடமும் முழுமையான பதில்கள் தற்சமயம் இல்லை என்றுதான் சொல்ல வருகிறேன்… ‘

(1990-1992 குறிப்புகளிலிருந்து.)

Kanchanat@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்