ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்


மழை புஷ்பம்

பிரிவு பற்றிய அச்சமோ
அசெளகரியமோ
எதுவும் தென்படவில்லை
உன் முகத்தில்
அடிக்கடி உள்ளங்கையை
பார்த்துக் கொள்கிறாய்
மென் பஞ்சுக் கரங்களை
முத்தமிட விழைகிறேன் நான்
வெளிர் நீலநிற சுடிதாரில்
தேவதை போல் இருக்கிறாய்
எனக்குப் பிடித்த நிறத்தில்
சுடிதார் அணிந்து வந்து
ஏன் என்னை வதைக்கிறாய்
உனது கேசத்தை வருடிச்
செல்லும் காற்று
என்னைப் பார்த்து கண் சிமிட்டுகிறது
நான் கொடுத்து வைத்தவனென்று
தூறலில் நனைவது
உனக்குப் பிடிக்குமென்பதால்
அடிக்கடி வானிலை அறிக்கையை
பார்க்கிறேன் நான்.

மெளனம் உடைகிறது

உன் இதயச் சிறைக்குள்
எனை அடைத்துவிடு
முடிந்தால்
ஆயுள் தண்டனையையும்
அளித்துவிடு
உன் கூந்தலை
அலங்கரிக்கும் மலர்கள்
புண்ணியம் செய்தவை
முள் தைத்தது
உன் பாதத்தில்
குருதி வழிவதோ
எனது இதயத்தில்
நீ புன்னகை புரிந்தாய்
ஆயிரம் மலர்கள்
இதழ் விரித்தன
புத்தகத்தை தூர எறி
காதல் தீயில்
பற்றி எரியப் போகின்றது
திருவடியில் தாமரை மலர்கின்றது
கூந்தலிலிருந்து மல்லிகை உதிர்கின்றது
ஒரு பூந்தோட்டமே நடந்து வருகின்றது.

அந்தர முத்தம்

மழை நின்றாலும்
மரத்திலிருந்து துளித்துளியாய்
வடிந்து கொண்டிருந்தது
மழை நீர்
பரிதி இனி உதிக்குமா
எனப் பயப்பட வைத்தன
கரிய நிற மேகக் கூட்டங்கள்
பறவைகள் குழாம் ஒன்று
அந்தரத்தில் மழையை
முத்தமிட்டுச் சென்றன
மலர்கள் சாம்ராஜ்யத்தில்
என்னவளுக்கும் ஓர் இடம் உண்டு
சிட்டுக்குருவியின் காதல் செய்கைகள்
உன்னை கன்னம் சிவக்க வைக்கிறது
உனது காலில் முள் தைத்தது
எனக்கல்லவோ வலித்தது
வாழ்க்கைக் கடலில்
கரை சேர்வேன்
கலங்கரை விளக்கமாக
என் காதலி இருக்கும் வரை
நானே நீ என்றாய்
ஏதோ தத்துவம் போலிருந்தது
மலை முகட்டில் உட்கார்ந்து
யோசித்தேன், கத்திப்பார்த்தேன்
பதில் வந்தது
நானே நீ என்று.

நினைவலைகள்

உச்சிமுகர்ந்து
முத்தமிட்டேன்
தூரத்தில் மறையும் வரை
வாசலிலேயே நின்றிருந்தாய்
உனது இதய கல்வெட்டில்
செதுக்கி வைத்திருந்தாய்
எனது பெயரை
உன் அன்பைச் சுமந்து
வந்த கடிதத்தில்
உந்தன் கண்ணீர்த் துளிகளால்
எழுத்துக்கள் ஆங்காங்கே
அழிந்திருந்தது
அந்நிய நாட்டில்
உன்னை நினைத்துக் கொண்டு
வாழ்வதைவிட வேதனை
வேறெதுவுமில்லை
எந்திரத்துடன் ஒத்துப்போக
மனம் ஒப்பவில்லை
என் கண்மணியாள்
எனதுள்ளத்தில் கோவில்
கொண்டு இருப்பதால்
இளமைக் காலங்கள்
வீணாகக் கழிகிறது
உனது இசைவில் தான்
இருக்கிறது
இரு துருவங்கள்
ஒன்றாக இணைவது.

ப.மதியழகன்

ப.மதியழகன்

ப.மதியழகன்