ராஜா கவிதைகள்

This entry is part of 46 in the series 20110417_Issue

ராஜா


______________________________________________________________
வட்டங்களால் ஆனவளுக்கு
______________________________________________________________
உயரம் போதவில்லை
மாடமேறியும் எட்டாக்கனி
எம்பிக் குதிக்கையில்
ஆடை தளர்ந்தது
விடுபட்டதொன்று
உயரப்பறந்து
கொத்தித் திரும்புவதற்குள்
புள்ளிட்ட துளையிலிருந்து
புறப்பட்டது ஓராயிரம்
ஒன்று குறையாமல்
கூடு சேர்ந்ததும்
வட்டங்களால் ஆனவள்
பறந்து போகிறாள்
ஏழ்கடல் மேலே.
_____________________________________
வீட்டிலிருந்து
______________________________________________________________
தெருமுனைவரை
சென்ற தடமொன்று
திரும்பிவிடும் தூரத்தில்தான்
இருக்கிறது
அங்காடித்தெரு ஆரவாரங்களில்
வண்ணமுமிழ் வெளிச்சங்களில்
சற்றே மயங்கும்
ஊரெல்லை தொட்டதும்
பெருமூச்சொன்று
வீடு நோக்கி நகரும்
நிலவொழுகும் ராத்திரியில்
ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
இளைப்பாறும் சாலை
நத்தைபோலும் பயணிக்கும்
அப்பொழுதுகளில்
தொடுவானம் தாண்டியும்
அது நீண்டிருக்கும்.
______________________________

Series Navigation