தேனு கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

தேனு


விதியெனும் கடிகைக்கருவி

பிறகென்றும் வாய்த்திடா நாளொன்றில்
நிறுத்தப்பட்டிருந்தன
கைக்கடிகை முட்கள்..
.
கடிகை வட்டங்களைப்
பெயர்த்தெடுத்து
அவ்வட்டங்களில் சதுக்கங்களை
இழைத்து வைத்து தேடுகிறேன்..
எனது சிற்சில மூலக்கூறுகள்
அடைத்திட யத்தனப்பட்டு..
.
வட்டங்களில் சதுக்கங்கள்
ஒவ்வொரு விதத்தில் கோண
அடைத்திட வகையின்றி
கலைத்து மீண்டும்
இழைக்கிறேன் முதலிலிருந்து..
.
விளிம்புகளை சற்று பின்னிறக்கி
பக்கவாட்டில் என்னைப் பார்த்து
கொக்கரிக்கின்றன
முட்கள் ஒன்றோடொன்று
பிணைந்திட்டு..

—————————————————————————————————————————
**************************************************************************************************

பின்னிரவு சாயங்கள்

வெண்ணிறத் திரை
மெலிதாக ஊடுருவப்பட்டு
சாளர கட்டங்கள் வழி
இரவுக்கீற்றுகளிடும்
சலனமற்ற நர்த்தனம்.
.
நிதம் என் உறக்கங்கள்
என்னுடையதாக இருப்பதில்லை…
என்னைத் தழுவியும் இருக்கவில்லை..
.
நிதர்சன சந்தேகங்கள்..
என்னை அயர்த்திடும்
பின்னிரவு நடப்புகள் பற்றி..
.
தன்மான மயிர்
உந்தித் தள்ள
விழிகள் சிவந்தும்
தொடர்கிறது
என் யூகத்திற்கான கண்காணிப்பு..
.
இன்றும் நடந்தேறுகிறது
அழகியதோர் பிணைப்பு..
நிம்மதி நாடிகள்
துளிர்த்திட..
அது பின்னிரவு அல்ல!!

– தேனு

Series Navigation

தேனு

தேனு