காலமும் கடிகாரங்களும்

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

சோ.சுப்புராஜ்


ஏகப்பட்ட கடிகாரங்கள்
எங்கள் வீட்டில்;ஆயினும் –
எந்தப் புள்ளியிலும்
எல்லாக் கடிகாரங்களும்
ஒரே நேரம் காட்டியதே இல்லை…..

எப்போதும் குழப்பம் தான் எங்களுக்கு;
எந்தக் கடிகாரத்தின் நேரப்படி
இயங்குவது என்பதில்……!
வேலை ஒழிந்த ஒரு
விடுமுறை தினத்தில்
எல்லாக் கடிகாரங்களையும்
ஒரே நேரத்திற்குத் திருப்பி வைத்தாலும்
அதனதன் வேகத்தில் ஓடி
அடுத்த நாளே
ஆளுக்கொரு நேரம் காட்டும்….!

வானொலியின் செய்தி வாசிப்பு;
தொலைக்காட்சியின் டிஜிட்டல் மின்னல்;
மசூதிகளின் தொழுகை அழைப்பு;
மாதா கோயில் பூஜை மணியோசை;
ஆலைச்சங்கின் வேலை நேர அலறல்;
இரயில் நிலைய மணிக்கூண்டு…..
இப்படி ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு நேரத்துடன் ஒப்பிட்டு
எங்களின் கடிகாரங்களைத் திருத்தியதில்
அவற்றின் சுயநேரம் மறந்து போயிற்றோ?
அல்லது
ஓடி ஓடி அவையும் கலைத்துப் போயிற்றோ?
இடது மணிக்கட்டில் நான் அணிந்திருக்கும்
எலக்ட்ரானிக் கைக்கடிகாரம்
கொஞ்சம் ஓடுகாலி;
அவ்வப்போது தலையில் தட்டி
நிகழ் காலத்திற்கு இழுத்து வர வேண்டும்….
பாட்டி காலத்து சுவர்க் கடிகாரமோ
அவளைப் போலவே அடிக்கடி
இறந்தகால நினைவுகளில் தேங்கி விடும்;
பிரமையிலிருக்கும் பெண்டுல மனசை
பிரியமாய்த் தொட மறுபடி ஓடும்…..
பரீட்சை நேரப் படிப்பிற்காக
அவசரமாய் வாங்கிய
அலாரம் கடிகாரமோ
செல்லம் கொஞ்சும் சவலைப் பிள்ளை;
மெதுமெதுவாய்த் தவழ்ந்து
அநேக நேரங்களில்
அதுவும் எங்களோடு தூங்கி விடும்……
மன
சள் மனைவியின் மணிக்கட்டிலிருக்கும்
மஞ் மஞ்சள் வசீகரமோ
அடிக்கடி சோர்ந்து நின்று விடும்
பூப்போன்ற திருகுதல்களால்
இயங்க வேண்டுமென்பதை
ஞாபகமூட்டியபடி இருக்க வேண்டும்….
கவனம் –
கொஞ்சம் அழுத்தித் திருகி விட்டாலும்
அழுது வீங்கி ஆர்ப்பாட்டம் பண்ணும்
அவளைப் போலவே…..!

இவை போக –
முதல் சம்பளத்தில் வாங்கி
முள்ளொடிந்து கிடக்கும் ஆல்வின்;
முகத்தில் நிறையக் கீறல்களுடன்
முடங்கிக் கிடக்கும்
நண்பன் பரிசளித்த அஜந்தா;
காதல் நினைவுகளின்
கண்ணீரில் மூழ்கிக்
கறுத்துக் கிடக்கும்
இதய வடிவ ஹைச்.எம்.டி.
திருமண நினைவுகளை உச்சரித்தபடி
பரணில் படுத்துறங்கும் டைட்டான்;
இப்படி
இன்னும் இன்னும் என
எத்தனை கடிகாரங்கள் இருந்தாலும்….
நினைவுகளின் களிம்பேறி
அடிமனதில் ஆழத்தில் புதைந்து கிடக்கும்
அம்மா ஆசையாய்ச் செய்து
கையில் மாட்டி அழகு பார்த்த
கால்கள் இன்றியே காலம் உணர்த்திய
பனை ஓலைக் கடிகாரங்களும்
பிட்டுத் திங்கவே மனமில்லாமல்
பிரியமுடன் பார்த்துக் களித்த
ஜவ்வு மிட்டாய்
வர்ணக் கடிகாரங்களும் கொடுத்த
சந்தோஷ தருணங்களை
உலோகக் கடிகாரங்கள்
ஒன்றாலும்
தர முடிந்ததில்லை….

Series Navigation

சோ.சுப்புராஜ்

சோ.சுப்புராஜ்