“பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு…….!“

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

முனைவர் சி.சேதுராமன்



முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

தாய்மொழியாம் தமிழினையே எப்போதும்
தவறாகப் பேசுகின்றார் தயக்கம் காட்டார்
தவறாக ஆங்கிலத்தைப் பேசிவிட்டால்
தவறென்று பிதற்றுகின்றார் பித்தர்போல!
தரணிபுகழ் தமிழினையே இழிவாய்க் கருதும்
தரங்கெட்ட்டோர் தமிழகத்தில் வாழ்கின்றாரே!

தங்கம் நிகர்த் தமிழகத்தில் பிறந்தோரெல்லாம்
தவறாகத் தமிழ் மொழியைப் பேசலாமோ?
தவமாகக் கிடந்துயர்ந்த தமிழினையே
தவறாக என்றும் மக்கள் எழுதலாமோ?
பிறநாட்டார் தமிழ் மொழியைக் கற்றுநன்கு
புலமைபெற்றுத் தமிழுக்கே தொண்டரானார்!

தனைப்பெற்ற தாயினையே தள்ளிவிட்டு
தறிகெட்டு அலைகின்றார் தலைகீழாக
தன்தாயைப் பழித்துரைக்கும் கயவரெல்லாம்
தன்மானம் இழிந்திங்கு திரிவோராவர்!
அயலாரை அயல்மொழியை அரவணைத்து
அன்னையாம் தமிழினையே தலைமேற் கொள்வோம்!

தமிழ்வழிக் கல்வியினை எதிர்த்து இங்கு
தடையாணை பெறவிங்கு முயல்கின்றாரே!
தமிழ் வழியில் கல்வி கற்றால் தகுதிபோமோ?
தாய்மொழியில் கல்விகற்க மறுக்கும் இந்த
தரந்தாழ்ந்தோர் நிலையினையே என்னசொல்வேன்?
தமிழன்றோ அனைவருக்கும் உயிரேயாகும்! இந்தத்

தமிழன்றோ தமிழருக்கு அடையாள மாகும்!
தரணியிலே அடையாளம் காட்டுதற்கு
தமிழைவிட வேறென்ன வேண்டு மிங்கு?
தரணியிலே ஆடையின்றிப் பிறந்திடலாம்
தரணியிலே அடையாள மின்றி வாழலாமோ?
தன்மானத் தமிழரிதை மறக்கலாமோ?

தமிழ் மன்றம் எனக்கூறி அங்கும் கூட
தமிழ் அழிக்க ஆங்கிலத்தில் பேசுகின்றார்
தமிழாலே ஒன்றுமாகா என்றுகூறி
தமிழ் கற்றால் சோறிங்கே கிடைக்காதென்று
தமிழினையே இழிவாகப் பேசுகின்ற
தமிழுறவுகளே உங்கள் நிலை என்ன சொல்வேன்?

தரணியிலே ஆங்கிலத்தைக் கற்றவர்கள்
தரணிமெச்ச வாழ்கின்றாரா அதுதான் இல்லை
ஆங்கிலந்தான் அவனியிலே சிறந்ததென்று
அறிவின்றிப் பேசும் நிலைமாறவேண்டும்
மொழிகளிலே உயர்வுதாழ்வு கற்பிக்கின்ற
இழிவுநிலை எப்போது மாறும் இங்கே?

தமிழர்கள் கூடுகின்ற இடங்களிலும்
தமிழர்கள் கொண்டாடும் விழாக்களிலும்
தமிழ் மக்கள் நடத்துகின்ற கடைகளிலும்
தமிழ்மக்கள் பெற்றெடுக்கும் மழலைகட்கும்
தமிழிலேயே பெயரிட்டு மகிழ்வோம்! நன்கு
தயக்கமின்றித் தமிழ் பேசிக் களிப்புறுவோம்!

தமிழ் பேச தமிழ் கற்க தயக்கம் ஏனோ?
தம் தாயை அம்மா என்றழைத்திடாத
தரங்கெட்ட குழந்தைகள்தான் எங்கும் உண்டோ?
தம்தாயை இழிவாகப் பார்க்கும் இந்த
தகுதியற்ற மனிதர்களை என்ன சொல்வேன்?
தாய்மொழியாம் தமிழ் வழியில் கல்வி கற்போம்
தரணியிலே தமிழர்களின் புகழைக் காப்போம்!

பிறமொழியார் அவர் மொழியைப் பேணுகின்றார்
பித்தேறி தம் மொழியைப் பழிப்பதில்லை
பிறக்கும் தம்குழந்தைக்கும் கடைகளுக்கும் அவர்
மறவாது தாய்மொழியில் பெயரும் வைப்பர்
தவறிக்கூட தம்மொழியை இகழ்வதில்லை
தம்முயிர்போல் தாய்மொழியை நினைக்கின்றாரே!

மொழியின்றேல் நாமில்லை உணர்வோம் நன்கு
மொழியன்றோ அனைவரையும் ஒன்றிணைக்கும்!
தமிழ் மொழியன்றோ தமிழர்களின் உயிர்நாடியாகும்!
தமிழுடனே பிறமொழியைக் கற்போம் ஆனால்
தமிழ்த்தாயை என்றும் நாமும் மறக்க வேண்டாம்!
தமிழ்மொழியை உயிராகக் காப்போம் நாமே!

தமிழ் மொழியைப் பிழையறவே கற்று நன்கு
தரமாக எழுத இங்கு பயிற்சி செய்வோம்!
தரந்தாழ்த்தி தமிழ்த்தாயைப் பழித்திடாமல்
தமிழ்த்தாயின் தரமுயர்த்த ஒன்றுசேர்வோம்!
பாரினிலே தமிழ் மொழியை உயரச்செய்வோம்!
பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு!

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.