பறக்க எத்தனிக்காத பறவை

This entry is part of 44 in the series 20110109_Issue

சின்னப்பயல்தானும் பறக்க இயலும்
என்பதை மறந்தே போனது அது.

இறக்கை என்ற ஒன்றை
எதற்கென நினைத்து
விரித்துக்கூட பார்க்கவில்லை அது

கிடைத்தவற்றைக்
கிளறிக்கொண்டிருப்பதிலேயே
சுகம் கொண்டது அது.

பாதுகாப்பான சூழலில்
இருப்பதாகக் கருதிக்கொண்டு
நாட்களைக் கடத்துவதிலேயே
மரத்துப்போனது அது.

சோம்பிக்கிடப்பதே சுகம்
எனக்கொண்டது அது.

கூண்டு விட்டுக் கூண்டு
செல்லும் இட மாற்றங்களை
மறுப்பேதும் தெரிவிக்காமல்
ஏற்றுக்கொண்டது அது.

கால்கள் உடைந்தும்
சிறகுகள் முறிந்ததுமான
தோழி தோழர்களைக்
கொண்டதுமாக
அங்குமிங்கும் அலைந்து
கொண்டேயிருந்தது அது.

“இருத்தல்” போதும்
என அகமகிழ்ந்து இப்போது
கூவுதலையும்
மறந்து அலைகிறது அது.

Series Navigation