தொடர்பில் இருப்போம்

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ராமலக்ஷ்மி


முகந்தழுவிச் சென்ற கடற்காற்றின்
சில்லிப்பை அனுபவித்திருக்கையில்,
சோளத்தைக் காட்டிச்
சிணுங்கியது மழலை.

அதன் விரல்பிடித்து நடந்து
மினுங்கும் தணலில்
மஞ்சள்முத்துக்கள்
வேகக் காத்திருந்து
வாங்கித் திரும்பும் வழியில்..

சந்தித்தான் எதிர்பாராமல்
ஆருயிர் நண்பனை
ஆண்டுகள் பலகழிந்து.

பரவசமாய் பிணைந்து கொண்ட
கரங்கள் நான்கின் கதகதப்புக்குள்
களிப்பாய் துள்ளியது நட்பு.

கிடைத்தசில நிமிடத்துள்
நீந்தித் திளைத்தார்கள்
மலரும் நினைவுகளில்.

“அந்த நாட்கள் எத்தனை சுகமானது”
அவன் சொல்ல
“வாய்க்குமா இனி அது போல”
இவன் மருக

சுட்ட சோளத்தைச்
சுவைத்துக் கொண்டிருந்த
இவன் குழந்தையின் கன்னந்தட்டி
பெயர் கேட்கத் தோன்றாத அவனும்

பஞ்சு மிட்டாய்க்குள்
காணாது போயிருந்த
அவன் குழந்தையின்
தலைதேடிக் கேசம் கலைத்து
‘என்ன படிக்கறாய்?’
தெரிந்திட ஆர்வம் காட்டாத இவனும்

மெயில் ஐடி, செல் எண்கள் பரிமாறி
“தொடர்பில் இருப்போம்” உறுதி கூறி
விடைபெற்று நகர்ந்தார்கள்..

காலடியில் மிதிபட்டுக்
கலைந்து கொண்டிருந்த
அழகிய சிறு மணல் வீடுகள்
பற்றிய கவனமின்றி..
சந்தித்த அவ்வினிய தருணத்தின்
அருமை பற்றிய பிரஞ்ஞையுமின்றி.

வீசிக் கொண்டிருந்தது சில்லிப்பாய்
தொடர்ந்து கடற்காற்று.
***

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி