M. ராஜா கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

M. ராஜா


சனிக்கிழமை இரவுகள்

மண் துகள்களோடு சிகரெட் சாம்பல்
கசங்கிய துணிகள் தாறுமாறாய் சாமான்கள்
பகலில் திருடன் நுழைந்திருப்பனோ?
கதவு வழியாய் நுழைந்த காற்றில்
ஈரப்பசையோடு தாவர வாசனை.
கோடை மழை பெய்திருக்கக்கூடும். எங்கே? எப்போது?

ஜன்னலுக்கு வெளியே-
வேட்டைக்கு செல்லும் வேகத்தில் வாகனங்கள்.
ஒன்றிரெண்டு இரையாகவும் நேரலாம்.

நாட்டு மரங்களை பிடுங்கி
நடப்பட்ட அலங்காரச் செடிகளுக்கு
கோடையிலும் சிரத்தையோடு நீர் பாய்ச்சும்
கார்பரேஷன் லாரி.

பின்னிரவின் பறக்கும் ரயிலில்
காலியாகவே இருக்கின்றன
பெரும்பான்மையான இருக்கைகள்.

இருளின் வெளிச்சமின்மையும் மீறி பளீரென்றிருந்தது
அவளின் முகமும் புன்னகையும்.

இளஞ்சூட்டில் தேநீர் குடித்தால் நன்றாய்த்தானிருக்கும்.

கட்டாய கடமைகள் ஏதும் நாளைக்கில்லை.

சற்று நீளமாகவே கழிகின்றது சனிக்கிழமை பின்னிரவு.

________

ஒரு கனவும் சிறு நிகழ்வும் பெருங்கொலைகளும்

வலிக்காம கொல்லுண்ணா
என்றவளின்
ஆசைப்படியே செய்துமுடித்து

சீக்கிரம் சாகடிச்சிடுப்பா
என்ற பாட்டியின்
வேண்டுதலை வெகு சீக்கிரமாகவே நிறைவேற்றி

மெதுவாடி தங்கம்
என்று பயந்த
அம்மாவின் கழுத்தையும் மெதுவாகவே…

0

மழைக்கு முளைத்த மச்சமாய்
படியோரம் படர்ந்திருந்தது அது.

மாத்திரைக்கு
ஒரு மி.மீ கடந்தது.

புகைதுப்பி
உயர்வானில் நகரும் ஊர்தியாய்
ஈரவாலிழுத்து ஊர்ந்தது.

0

மூவரையும்
என் கைகளால் கொன்ற
கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்தேன்.

0

ஈரந்தெறிக்க
குதிகாலால் நசுக்கிக் கொன்றேன்.

o0o
_______
திணை மயக்கம்

மரத்தினடியில்
மழைக்கு ஒதுங்கியது வாகனம்.

உழைத்து களைத்த பெண்ணுக்கு
பூச்சூடிய ஆண் அரணாகும்.

நகராது நிற்கிறது ஒரு உயிர்
அற்றது ஒன்று நகர்கிறது.

மாலை மழையில் இலக்கணம் மயங்கும்.
_______
சந்திர சமுத்திரம்

கரித்தொண்டை
விழுங்கிய மெர்க்குரி முட்டை
முழுதாய் கரையவில்லை.

அள்ளி எறிய
நீண்டு நெளியும்
கரங்கள்.

விடமேறி நீலம் பரவும்.

வாயில்
நுரை தள்ளி புரள்கிறது
ஒரு கறுப்பு அமீபா.

ஆணவ உயரத்தில்
அமைதி முறுவலிக்கும்.
________

Series Navigation