விசாரம்

This entry is part of 41 in the series 20101010_Issue

வ.ந.கிரிதரன்


அது
பால்யத்தின்
வெண்பொழுது.
காடு, மேடு, காலறுந்த
செருப்பு, கவண் …
நான் நினைத்தேனா
இன்னுமொரு பொழுது
பந்தின் மறுபுறத்தே
இன்னுமொரு இருப்பு
தலைகீழெனவே?

காலவெளியில்
கலந்திருக்கிறது
இறப்பு.
அசைமீட்பில்
எதிர்பார்ப்பில்
கழிகிறது
நிகழ்.
சிந்தையென்னும்
விந்தை – உள்
விரியுமிந்த
உலகு
எனக்கும், உனக்கும்,
அவர்களுக்கும்
ஒன்றா?
நம்புதற்கு
என்ன சாட்சி?

நான் நடக்குமிந்த
மண்
ஆழிக்கரங்களால்
அடியுண்டு போனது.
இராட்சச ஆமையென்ன, மீனென்ன
‘டைனசோர்’களென்ன
ஆடிய ஆட்டம்தானென்னே!
அரசர்கள் , அரசிகள் ,
திண்தோள் தலைவர்கள்,
பணைமுலைத் தலைவிகள்
ஆண்கள், பெண்கள்
ஊடினார்கள்; கூடினார்கள்
ஆனந்தித்தார்கள்.
பின்னொரு போதொன்றில்
புள்ளொன்று தன் குஞ்சினைக்
காப்பதற்காய்த்
தீனக்குரலிட்டுச்
சோர்ந்துகிடந்தது.
கொப்பொன்றில்
அணிலொன்று
துள்ளியது; தாவியது.
எல்லாம்
இதே இந்த மண்மீதில்தானே!
என் பங்கிற்கு இன்று
நான் விளையாடுகின்றேன்.
அல்லது
அவ்விதமிருப்பதாகக்
கருதுகின்றேனா?
கருதுவதுண்மையெனின்
அறிதற்கு வழி?
நேற்று
அவை.
இன்று
நான்.
நாளை
?

இவ்விதம்தான்
நேற்றும் பலர் இருந்தததாக
எண்ணிக் கொள்கின்றேன்.
இப்பொழுதுமிருப்பதாக
எண்ணிக் கொள்கின்றேன்.
நாளையும் இருக்கப் போவதாகவும்
எண்ணிக் கொள்கின்றேன்.
எண்ணத்திற்கப்பால்
இருப்பதெதுவோ?
எண்ணம் மீறுதற்கு
ஏது
வழி?

உன்னை நான் பார்க்கும்போது
உன்னை நான் பார்க்கவில்லை.
என்னை நீ பார்க்கும்போது
என்னை நீ பார்க்கவில்லை.
உள்ளே நீ பார்ப்பாயென்றால்
உண்மை நீ அறிந்து கொள்வாய்.
இன்னுமுள் பார்ப்பாயென்றால்
இயங்கிடும் துகளே பார்ப்பாய்.

நடனத்தின் விளைவே
இயங்கும் உலகே.

அடிப்படைத் துகள்
நடனம் தவிர்த்து – இந்தக்
காலவெளியில்
என்னதானுள?
இதுவுமென்
புரிதலின் விளைவென்றால்
இருப்புக்கும் அர்த்தமுண்டோ?

ngiri2704@rogers.com

Series Navigation