நான் கல்யாணத்துக்கு நிற்கிறேன்!

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

ஜோதிர்லதா கிரிஜா


கன்னிப்பெண் ணொருத்திதன் கதைஇது வென்றெவரும்
தலைப்பினைக் கண்டதுமே தாளிதனைத் தள்ளாதீர்!
பன்னிரண் டுயிர்தமைப் பராம ரித்துவரும்
தலைப்பிள்ளை ஒருவன்தன் தலைவலிக் கதைகேளீர்.

குடும்பத்தில் யாவர்க்கும் மூத்தவனாய்ப் பிறந்திடவே,
உயர்கல்வி பெருமாசை உடனடியாய்த் துறந்திட்டேன்:
கடும்பசியில் குடும்பத்தார் கலாங்காதி ருந்திடவே
அயர்வின்றி அலுவலகம் பலஏறி இறங்கிட்டேன்.

எனைஈன்ற தந்தைதாய் எந்தையின் தந்தைதாய்
உடன்பிறந்த தங்கை-தம்பி இவரன்றி எழுவராவர்;
எனைஎன்றும் சோற்றுக்கிவர் எதிர்நோக்கி நின்றவராய்க்
கடன்படவே வைத்திட்டார் – எனையன்றிக் காப்பரெவர்!

பாதியாய் இளைத்திட்டேன் ஏறிப் பல வாசற்படி;
இறுதியாய்க் கிடைத்ததொரு சிறுவேலை தகுதிப்படி:
ஊதியம் போதாமல் வீதிபல உலவிட்டேன்,
குருதிநிறம் குன்றிடவே பகுதிநேரம் உழைத்திட்டேன்.

என்னிரு கைகளாலே எண்ணிறந்த பணிசெய்தும்,
சம்பளம் போதவில்லை; சங்கடம் பலவாக,
பன்னிரு வயிறுகளைப் பராம ரிக்கவேண்டிப்
பம்பரமாய்ச் சுழன்றிட்டேன், பணமொன்றே குறியாக!

அழகனாம் எனைக்காணும் அலுவலக அணங்குகளின்
அகல்விழிகள் ஆர்வத்தால் அகன்றிட்ட போதெல்லாம்,
விழிகளைத் தாழ்த்திடுவேன், வீணாசை என்பதுடன்,
பகல்கனவு கண்பதனால் பயனிலை என்பதாலும்!

தங்கைகள் வரிசையிலே தாலிபெற நிற்கையிலே,
தமையனவன் குமையலாமோ துணைதேடும் ஏக்கத்தில்?
என்கைகள் பாடுபட்டு என்னதான் சேமித்தாலும்,
அமையவில்லை துணையவர்க்கு வரன்விலைதன் ஏற்றத்தால்.

பெண்களின் திருமனங்கள் ஐந்தாட்டுத் திட்டங்கள்!
மூவர்தம் திருமணங்கள் முடிப்பதற்குள் மூப்புற்றேன்;
கண்களின் கீழ்ப்புறத்தே வந்தன கரு வட்டங்கள்;
ஆவலுடன் ஆசைகளும் அற்றுப்போய் அலுப்புற்றேன்.
கன்னத்து எலும்புகளும் காதோர நரைமுடியும்
முன்புறத்து வழுக்கையுமே முடங்கிட்ட முதியோனின்
சின்னத்தைச் செத்தி யென்னைச் சேதாரப் படுத்தியதால்,
என்புறத்தே பெண்களிந்நாள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

கலியாணச் சந்தையிலே கன்னி மட்டும் நிற்பதில்லை:
கடந்தநாள் காளைஎனைப் போன்றோரும் நிற்பதுண்டு:
மலிவான மாப்பிள்ளைமார் மலியும் நாள் வருகையிலே,
முடிந்தகதை தொடர்ந்திடவே முத்தான வாய்ப்புண்டு.

பெண்களில்தான் பிறர்தமக்காய்ப் பெருந்தியாகம் புரிந்திடுவோர்
உண்டென்று உரைக்கின்ற திவ்வுலகம் முழுமையுமே;
எங்களிலும் எனையொத்தோர் எண்ணற்றோர் அறிந்திருவீர்!
விண்டுரைத்தேன் கண்டுகொள்வீர் அவர்தமது அழுகையுமே.

நன்றி: அமுத சுரபி

jothigirija@live.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா