ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

மூலம் – மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,


முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் – வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்

பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது

‘நாட்டைக் காக்கும்’ எனக்கு காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து

விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்

ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது

கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்

கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்

நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா

பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்

கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்

* பிரித் நூல் – பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.

மூலம் – மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்