ஞாயிறை போல் வாட்டும் ஒரு திங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

காளி நேசன்



என்னை தொடர்ந்து பறக்கும் ஒரு பருந்து
நான் செல்லும் திசையெல்லாம் தலைக்கு நேர் மேலாக!
உராய்ந்து செல்லும் அதன் நிழல் என்மீது மறுபடியும் மறுபடியும் !
இன்நிழல் உலகெரிக்கும் என் வெப்பத்தை எப்படி தணிக்கும்!
எதை நான் பாட? என்னை சுட்டெரிக்கும் உன் குளிர் அழகை?
உலகின் தணியாத தாகத்தை? எதை நான் பாட? எப்படி பாட?
அப்படி என்ன ரௌத்திரம் கனல் பொழியும் நிலவே?
தாள முடியவில்லை உன் தணலின் இன்ப வெப்பம்!
இமைக்காமல் எக்கணமும் என் மீது நீ தொடுக்கும்
கதிரலைகளின் காயத்திற்கு இதமாக மர நிழலில்
தஞ்சம் புகுந்தவனை அதன் இலைகளும் விரும்பாமல் விலகி
என்னை உன் தணலுக்கு இரையாக்குகின்றன!
உன் ஓவியத்தில் காணாமல் போயிருக்கும் ஒரு கண்ணாடி துகள் போதும்
அதில் என் உருவம் தெரிக்க கனல்கக்கும் கதிரலைகளை உன்னிடமே திருப்புவேன்!
கார்மேகமாக்கி கடும் மழை பொழியச் செய்வேன்!
மிதந்து வந்தருகில் அமர்ந்த பருந்து கேட்டது! “தேன் பொன்ற மொழி வேண்டுமா?
கலைகளின் செல்வி போதுமா? ரம்யமான அழகு? கொற்றவையின் தவம்? காளியின் வேல்?
உன்னால் தவிர்க்க முடியுமா? நித்யம்! பௌர்ணமி! நினைவழிக்கும் அதன் நித்யவெழில்!”
நான் சொன்னேன்! ஞாயிறை போல் வாட்டும் திங்களை குளிர்விக்கும் ஞாயிறு நான்!
பறந்து சென்ற பருந்து அனுப்பியது,
கருமேகம் சூழ சூரைக்காற்றுடன் வந்தென்னை வாழ்த்திய ஒரு மழை!

Series Navigation

காளி நேசன்

காளி நேசன்