தூங்கும் அழகிகளின் இல்லம்

This entry is part of 35 in the series 20100905_Issue

நட்சத்திரவாசி


தூங்கும் அழகிகளின் இல்லத்திற்க்கு
ஒருமுறை சென்றிருந்தேன்
நான் நினைத்ததற்க்கு மாறாக அவர்கள்
தூங்கிக் கொண்டிருந்தார்கள்
நிறைய வாடிக்கையாளர்கள்
கண்விழித்து இருந்தனர்
மெல்லிய கீதம் இசைப்பரப்ப
அறுசுவை உணவுகள் பரிமாறப்பட
வேலைக்காரர்களின் பரப்பரப்புகளுக்கிடையில்
அழகிகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்
அவர்களில் பெரும்பான்மையானோர்
ஆடையணிந்திருக்கவில்லை என்பதும்
அவர்களின் முனகும் குரல் கீதயிசையில்
யாருக்கும் கேட்கவில்லை என்பதும்
அநேகமாக நம்பக்கூடிய ஒன்றாகும்
தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த
படுக்கையறை கட்டில்கள்
காலியாக இருந்தன என்பது
ஆச்சரியமான செய்தியே
சுழல் மின் விசிறிகள்
ஓயாமல் சுழன்றன
சில வாடிக்கையாளர்கள்
உற்சாகமிகுதியில் வாசல்கதவை
தாழிடமறந்து விட்டார்கள் போலும்
மேஜைகளில் தூங்கும் அழகிகள்
யாரும் காணலுறலாம்
வாடிக்கையாளர்கள்
அவர்களது திட்டமிடப்பட்ட
நிர்வாணகோலத்தை கண்டதும்
மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றனர்
நான் சென்ற அறையின்
தூங்கும் அழகி அநேகமாக
தூக்கத்தின் உச்சத்திலிருந்தாள்
முகத்தில் ஏதொரு சலனமோ
உணர்ச்சியோ இல்லாமல்
கட்டிலில் ஆடையாபரணம் அணிய
நிர்வாணத்தை களைந்திருந்தாள்
அறை கதவுகளை தாழிட்டு
மின்விளக்குகளில் அவளை
காண்பதில் கிலேசம் இல்லாமலில்லை
தூங்கும் அழகிகளோடு இருந்த போது
நான் கண்ட உண்மை விநோதமானது
தூக்கத்தின் மூலம் அவர்கள்
கனவுகளை பெருக்குகிறார்கள்
அந்த கனவுகளில் புகுந்து கொள்ள
யாதுவான திறப்புகள் இருந்தன
கனவினுள் புகுந்து கொண்டதுமே
நறுமண தூபத்தின் புகையில்
அலங்கரிக்கப்பட்டிருந்த ஊர்தியில்
நான் தூங்க தொடங்கினேன்
ஏதோ ஒரு பயணம் மேற்க்கொண்டது
போலிருந்தது அந்த அனுபவம்
மற்றபடி தூங்கும் அழகிகள் யாரையும்
தொந்தரவு செய்யாமல் அவர்தம்பாட்டுக்கு
தூங்கிக்கொண்டிருந்தார்கள்
என்பதுவே அந்த இல்லத்தின்
விசேசமாகவிருந்தது.
மேலும் தூங்கும் அழகிகளிக் இல்லம்
எப்போதும் பரபரப்புடனேயிருந்தது.

Series Navigation