கவிதையும் அவனும்

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

லறீனா அப்துல் ஹக்.


அந்தக் கவிதையை அவனுக்கு
வாசிக்கத் தெரியவில்லை.
அவனைப் பொறுத்தவரை
“அது”
மெய்யெழுத்தும் உயிரெழுத்தும்
உயிர்மெய்யெழுத்தும் கொண்டு
குறுக்கமாய்… நெடுப்பமாய் – சில
வரிகள் மட்டும்தான்!

உணர்வுகளை இழைத்திழைத்து
உயிர்ப்பைப் பெய்து வைத்த
ஜீவ கவிதையதன்
சிலிர்ப்பை குதூகலத்தை
செல்லச் சிணுங்கலினை
தவிப்பை கண்ணீரை
வலியை பரவசத்தை
இப்படி எதனையுமே
அவனறிய நியாயமில்லை;
மீட்டத்தெரியாதவன் விரலிடுக்கில்
வீணையாய்க் கிடந்தது
கவிதை.

அதில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும்
அழகியல் அனுபவத்தை…
உட்பொருள் தந்துநிற்கும்
எண்ணரும் இன்சுவையை
ரசித்துத் துய்ப்பதற்கும்
இன்பத்தில் தோய்வதற்கும்
வாய்க்குமோ, பாவம்!
அவனோ வெறும் மனிதன்.
அவனுக்கு அக்கவிதை
வெற்றுக் காகிதத்தில்
ஒருசில எழுத்துக்கள், இதில்
ரசமென்ன! ரசனையென்ன!

ஆக்கம்: லறீனா அப்துல் ஹக்.

Series Navigation

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)

லறீனா அப்துல் ஹக்- (இலங்கை)