வேத வனம் விருட்சம் 96 –

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

எஸ்ஸார்சி


தண்ணீர் எங்களை
மங்கலக்கண் கொண்டு நோக்குக
மங்கலத்தால் எம் உடல் ஔர்க
நீர் வாழ் அக்கினி
எமக்கு வலிமையும் வல்லமையும் தருக
எம் குரல் தேனாய் மாறி ஒலித்திடுக
நற்பாட்டே எம் செவிநுகர்க.
பொருளும் பொருள் உறை ப்பாண்டமும்
எம்மை விட்டு நீங்காமை வேண்டும்
கதிரோன் விண்ணிலிருந்து
அக்கினி புவியிலிருந்து
வாயு வானிலிருந்து
எமன் மனிதர்களிடமிருந்து
சரசுவதி பொருள்களில் தங்கி
ஆட்சி செய்யட்டும்
விண் வான் புவி இவையினின்று எம்மை வெறுப்போன்
விலகிப்போகட்டும்
எம்மை வெறுப்போன் தன் ஆன்மாவை வெறுப்போன்
எம்மை வெறுப்போன்
தம் சுவாசம் தொலைக்கட்டும்.
வெற்றிகொணர் பொருள் நமது
தோன்றுவதெப்பொருளும் நமது
அழகொளி நமது
பிரம்மமொடு சொர்க்கம் நமது
வேள்வி வீரர் பசு மக்கள் நம்மவர்
எதிரியின் வீரத்தை வலிவை ஆயுளைச்
சுருக்கிக் கீழே தள்ளுவோம் ( அதர்வ வேதம் காண்டம் 16)
இந்திரன் வருக அக்கினி வருக
விட்ணு இவண் வருக
எதிரியிடமிருந்து எம்மைக்காத்திடுக
பசுக்கள் எமக்கு நிறைக
இன்பம் எமக்கு நிறைக
நல்லறிவு எமக்கு நிறைக
ஒளி பிரவாகிக்கட்டும் எமக்கு
பகைவன் வசம் யாம் பிடிபடாமல் ஆகுக
பகல் போலே இரவும் கடந்து செல்க
மனிதர் விடு மாய்க்கும் அம்புகள்
தேவர் விடு அம்பால் தொலையட்டும். ( அதர்வ வேதம் காண்டம் 17)
ஒரே படுக்கையில் யாம்
எமி என்னிலே எமனிடம் காமம்
என் அங்கம் அவனது
இரு சக்கரமென நாம்
யமி கேள் யான் எமன்
வேறிடம் சென்று விடு நீ
தேவர் இமைப்பதில்லை
கதிரோன் கண் திறக்கலாம்
சகோதர சகோதரிகள் நேர்மையற்றவை பழகுதல்
வருங்காலத்தே நிகழும்
நீ வேறு எவனிடமாவது செல் யமி
நாதனில்லாதக் காலம்
நான் காமத்தின் பிடியில்
என் உடலோடு உன் உடல் சேர் யமா
யான் சகோதரன் என்னை விட்டு விடு
வேறு யாரையேனும் நோக்கு யமி
மனம் இருதயம் இசையா ஒன்று
யான் சகோதரன் இயலாது என்னால்
அழிந்துபோவதா நான்
யமா நீ இதயமிலி
கொடி போல் குதிரைபோல் உன்னை
வேறு ஒருவள் தழுவாள்
யமி நின்னை
கொடிபோல் வேறு ஒருவன் தழுவுவான்.
மங்கலம் தரும் உஷை வெளிப்படுகிறாள்.
அக்கினி பிறப்பெடுத்தது
கருடப்பறவை பறந்ததை விரிந்ததை
அக்கினியிடம் கொண்டுதந்திட
அக்கினியோ ஆரியர்க்கு அறிவொடு ஆற்றலை
வழங்கி நின்றது
மனிதர்க்குப்பசுவின் பால்
நலம் தந்தது வானம் நீரை நெய்யை த்தந்தது
இந்திரன் வீரன் ஆண்மையாளன்
எம் துதிகள் இந்திரனுக்கு
உருத்திரன் துதி செய்வோனுக்குச்சுகம் தருக
சரசுவதி யை இசைத்து அழைக்கிறோம்
அளிப்போனுக்கு அளிப்பவள் அவள்
சோமபானம் சுவைக்கும் பிதுருக்கள்
தருப்பையில் அமர்ந்து எம்மைக்காக்க
முழந்தாளிட்டு தெற்கு நோக்கி
யாம் தரும் அவி பெறுக பிதுருக்கள்
எமனே இங்கே வா
இன்பமாய் இரு
கவிகள் சொல் தோத்திரங்கள்
நின்னைக்கொண்டு வரட்டும்
அரசன் நீ இன்பம் பெறுக எமனே
எமனுக்கு நெய்மிகுபாலும் அவியும் அளியுங்கள்
வழி அமரும் மனிதரைக்காணும் நான்கு கண்கள் கொண்ட
இரு நாயுடைய எமனே
நாடும் அவனுக்கு நலம் தா.
கலப்பு முகங்களுடன் தசுயுக்கள்
வேள்வித்தொடர்பிலாதன புசித்து
சூக்கும உடல் தாங்கும் அவர் வேள்வியினின்று
விலகிப்போகட்டும்
புதைக்கப்பட்ட சாம்பலாக்கப்பட்ட மேன்மையுடைய
பிதுருக்கள் அவி புசிக்க வருக
அழைத்துவந்திடு எமனே
புவியே நீ தாயெனவாகி
அவன் உடல் மூடு
மனைவி தன் கணவன் உடல் மூடுவதுபோலே
புவியே அவன் உடல் மூடு
அஜனும் பூஷணனும் அவன் உடன் செல்க
யம சபைக்கு அழைத்துச்செல்லட்டும் அவனை
மரித்தவன் கையினின்று தண்டத்தை
சுவீகரித்துக்கொள்வோம்
மரித்தவன் கையினின்று வில்லை வல்லமையோடு
சுவீகரித்துக்கொள்வோம்
பெண்னே அவன் மரித்தவன்
அவனை விட்டு விடு
நீ இரண்டாவது கணவனிடம் சேர்
விசுவாமித்திரன் ஜமதக்கினி வசிஷ்டன் பரத்வாஜன்
கோதமன் வாமதேவன் அத்திரி முனிகள்
நம்மை ப்புரிந்துள்ளார்கள்:
பிதுருக்கள் எமக்கு நலம் தருக
புவியே அவனைக்கீழே போகவிடாதே
மண் கட்டியொன்று மரித்தோனுக்காக
நிலைப்படுத்தப்படுகிறது
விதவை ஆகா ப்பெண்டிர்
நெய்யும் அஞ்சனமும் பூசிக்கொள்க
ரத்தினங்கள் அணிக
நல்ல மனைவிகள் அவர்கள்
முக்கிய மிகு இடம் சேரட்டும்
பெண் தவளை தணல் அணைக்கட்டும்
சடலம் எரித்த நெருப்பு தண்மையாகுக
இந்திரனே வருக
தந்தை மகற்கு அறிவு கொணர்வதுபோலே
கொண்டுவா எமக்கும்
எள் சேர்த்து தெளிக்கும் தானியங்கள்
சுவதாஆகிப்பெருகட்டும்
எமராசன் அவற்றை உமக்கு அனுமதிக்கட்டும்
முன் சென்ற பிதுருக்களுக்கும் பின் தொடர்ந்தோருக்கும்
நெய் நதிப்பெருகிப்பாய்க
நடுவில் நில்லாது
பிதுரு உலகம் செல்க அவன்
பின் புறம் கீழ் உச்சம் என
எப்பக்கமும் அக்கினி தகிக்கட்டும்
கோதுமை பால் தயிர் நெய் தேன் மாமிசம் நீர் அன்னம்
நிறைந்து வேள்வி செய்கிறோம்
தானியங்கள் பசுவாகி எள் கன்றாகும்
யம ராச்சியத்தில் நிலைத்து வாழும் பசுக்களில் ஒன்றுமாகும் அது.
இது பழைய வண்டி
இதிலே முன்னோர் சென்றனர்
இனியும் இதுவே செல்லும்
முன்னே போனவர் நின்னைச்சுமந்துகொண்டு செல்கிறார்கள்
தென் திசையினின்று வந்த பிதுருக்கள்
சரசுவதியை அழைக்கிறார்கள்
எல்லா நலமும் அருள்வாள் சரசுவதி.
மண் மயமான நீ மண்ணொடு சேர்கிறாய்
பிதுருவொடு ஒன்று சேர்க
இளமை போய் மூப்பு வரும்
பிதுருவொடு சேர்ப்பும் வரும்
தந்தை அணிந்தபொன்னை அணிந்துகொள்
பிதாவின் வலது கையை சுத்தம் செய்
நெய்த்தாரையும் தென் நதியும்
பொங்கிப்பாய்க
ஒளி வீசும் புகை விசாலமாகிச்சூழ்க
அக்கினி மரித்தோன் உடல் பாகத்தில்
ஏதேனும் விட்டிருந்தால் மறுபடியும்
நிறைவாய் அனுப்பி வைப்போம்
குதுகூலமாய் இருங்கள் சொர்க்கத்தில்
நீத்தார் எல்லோருக்கும் வந்தனம்
எல்லோருக்கும் சுவதா
நீர் நடுவே செல்லும் நிலா
கருடன் பறக்கும் வான்
பொன் சக்கரமுடைய மின்னல்கள்
அறிவார் யார் உம் பாதை.
வானமே பூமியே எமக்கு இரங்குங்கள் ( அதர்வ வேதம் காண்டம் 18)
———————————————————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி