ஒலியும் மொழியும்

This entry is part of 36 in the series 20100627_Issue

சீராளன் ஜெயந்தன்


…..
விடியற்காலை இரைந்து
எழுந்தது
குக்கர் விசிலுடன்.
படுக்கையில் கிடந்த செல்போன்
கூவிக்கொண்டிருந்தது
படிக்காத குறுஞ்செய்திக்காக.
“நல் காலய் வன்க்ம்”
பதில் சொல்லும் முன்
அலறியது குழந்தை ஒலி
யார் மாற்றியது ரிங்டோன்
எரிச்சலுற்றேன்.
‘நான் இல்ல டாடி’
பெரியவன் பதில்.
அவசர அவசரமாய் பிரஷ் தேடி
பல்துலக்கி குளிக்க
பாத்ரூம் காலியில்லை.
இன்னுமாடா குளிக்கலை,
ஆட்டோ வரப்போகுது-கத்தினேன்.
டிபன் வைத்து லஞ்ச் கட்டி
ஷ்ஊவை மாட்டி
பேக்’ கை மாட்டி
‘பை பை’ சொல்லும்போது,
“ஒன் பாத் ரூம் வருது”
என்றான் பொடியன்.

சாப்பிட்டு முடித்து
உடையை தேடினால்
தயாராய் இல்லை.
அயர்ன் பாக்ஸ் ஆன் பண்ணி
தேய்க்க துவங்கலில்
காலிங் பெல் ஒலித்து
எட்டிப் பார்த்தால்
கேபிள் காரன்.
காசை கொடுத்து
வாராத சேனலுக்கு சண்டைபோட்டு
திரும்புகையில்
அயர்ன் பாக்ஸ் சூடேறி
சட்டை பொசுங்கியது.
“அட முண்டமே,
உன்கொரு ரிங்டோன்
இல்லையா!
ஊமைக் கோட்டான்”
என்றதன் தலையில்
குட்டினேன்
உம் என்றிருந்தது.

Series Navigation