மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

மலேசியா ஏ.தேவராஜன்


1.
பறவைகளின் சிறுகூட்டுக்குள்
பகிர்ந்தளிக்க் ஏதுமில்லையென்பதாலும்
நாளை வீசும் புயலில்
சிதறினாலும்
மரத்திலிருந்து ஒரு
கூட்டுக் கொலை
அடுத்த வினாடி நிகழ்ந்தாலும்
சிரிப்பதையும் அழுவதையும்
அவை உணராமலேயே
ஒரு வாழ்க்கையை
வாழ்வித்துவிடுகின்றன.

அவற்றிற்கு வாழ்வென்பது
புலன்களின் தேவையில்
அடுத்தடுத்துப் பறப்பதும்
நொடிப்பதுமே தவிர
பெரிதாய் வைத்துப்போக
அவகாசமில்லை.

2.
வீட்டுக் கதவை
வெகு காலமாய்த்
தட்டிக்கொண்டிருந்தார்

தட்டத் தெரிந்தவருக்குத்
திறக்கத் தெரியாதா
கடவுளுக்கு ?

3.
ஒரு கையறுநிலையில்
நீரின் எரிச்சலுக்கு
மண்ணெண்ணெய்
தீர்வாகலாம்.

4.
அட்டாலையின்
அடுக்கிய புத்தகங்களில்
கசிந்த நீரில்
வார்த்தைகளை வடிகட்டி
மீண்டும் அடுக்கிவைக்க
மீண்டும் அடுக்க
மீண்டும் கசிய
இறுதியில் சொற்களெல்லாம்
தீர்ந்துபோயின

தெளிந்த ஒரு தினத்தில்
நீரெல்லாம் இறுகியிறுகிப்
புதிய சொற்களை
நிர்மாணித்தது

பெரிதான ஒரு பேழையில்
படித்துப் பார்த்து
அடுக்கி வைத்தனர்
என் பிள்ளைகள்

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

ஏ.தேவராஜன்

ஏ.தேவராஜன்