தொட்டி மீன்

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்.


படகு கவிழ்ந்ததில் பலபேர் மரணம்
வெள்ளப் பெருக்கோடு
அடித்துச் செல்லப்பட்டவர் ஆயிரமாயிரம்
பூகம்பத்தால் பூண்டோடு ஒழிந்தது நகரம்
ரயில் தடம்புரண்டதில் காலமானவர்
இருபது இருக்கலாம்

தொலைக்காட்சிப் பெட்டியில்
தொடர்ந்து வந்த செய்திகளை
ஆயாசமாய்ப் பார்த்தபடி
சோற்றிலே இன்னொமொரு
கரண்டி குழம்பினை ஊற்றிக் கொண்டவன்
‘எங்கே சின்னு’வென மகளைத் தேடினான்.
‘தொட்டிமீன் செத்து மிதந்த சோகத்துல
அழுதழுது தூங்கிடுச்சு’ மனைவி பதிலளிக்க,
ஒரே ஒருகணநேர உறுத்தலுக்குப் பின்
மெதுவாகச் சொன்னான்:
‘கொழப்பில உப்பு கொஞ்சம் ஜாஸ்தி.’

அத்தனைதான் முடிகிறது
அனுதாபம் என்பது அன்றாட வாழ்விலே.
*** *** ***
நன்றி: அகநாழிகை [மார்ச் 2010]

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி