வானமெங்கும் வஞ்சியின் வடிவம்

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

ப.மதியழகன்


மெல்லிடையாள், கொடிநடையாள்

விழிகளிரண்டால் சமர் புரிவாள்.

கண்மணியாள், பொன் நிறத்தாள்

செவ்விதழால் நவிலும் தேன்குரலால்

மயிலிறகாய் தேகமெங்கும் வருடிக்கொடுப்பாள்.

நிலவொளியாள், மலர் முகத்தாள்

மென் பஞ்சுப் பாதங்களால் மண் அளப்பாள்.

ஈசனின் இடப்பாகமானவள், உயிர்களுக்கு வித்தானவள்

நாணி நிலம் பார்த்து வெட்கி கன்னம் சிவப்பாள்.

ஒளியின் கிரணமானவள், வானவில்லின் வண்ணங்களானவள்

தனது தோற்றப் பொலிவைக் கொண்டு

விண்ணையே வியக்க வைப்பாள்.

ஸ்படிக நீரானவள், மழையின் சுவை போன்றவள்

முத்துப் போன்ற பற்களைக் கொண்டு

சிந்தும் புன்னகையால் அந்த மின்னலையே தோற்கடிப்பாள்.

நதியின் நீரலையானவள், புயலின் மையம் போன்றவள்

சிறு நகத் தீண்டலிலே மானிடனை தேவனாக்கி

தனது வியத்தகு ஆற்றலை உலகோருக்கு உணர வைப்பாள்.

கார்மேகமானவள், விருட்சத்தின் வேர் போன்றவள்

தனது தயை குணத்தால் பூமிப்பந்தின் சுழற்சியையே

கண நேரம் நிறுத்திவைப்பாள்.

நிலைச்சுடரானவள், குழந்தையின் பசியைப் போக்கும்

பால் போன்றவள்

ஏக்கத்தினை காதல் பரிசாக தந்து,

காதலையும், காதலனையும்

உயிரோடு கல்லறையில் புதைத்து வைப்பாள்.

மலரின் நறுமணமானவள், விடை காண இயலாத

புதிர் போன்றவள்

என்றும் வளராத தேய்பிறையாய்

ஆடவர்களின் வாழ்வை மாற்றி வைப்பாள்.

தெய்வத்தாயானவள், கருவறை தெய்வச்சிலை போன்றவள்

தனது உணர்வெழுச்சிகளை சம்ஹாரம் செய்து

உள்ளத்திலேயே பூட்டி வைப்பாள்.

ஐம்பூதங்களானவள், உடலை இயக்கும் உயிர் போன்றவள்

அன்று தில்லை நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை

மனக்கண்ணால் கண்டு அகிலம் வியக்க

உள்ளிருந்து அந்தச் சிவகாமி ஆட்டுவித்தாள்.

ப.மதியழகன்

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்