மகளுக்கு…

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

காவிரிக்கரையோன் MJV


உருகி உயிரெடுக்கும் வெப்பத்தையும்
வந்தால் கம்பளிக்கடங்கா குளிரையும்
தாகத்தின் பசியை காசாக்கிய கயமைத்

தனத்தையும் உனக்காகவே செதுக்கியுள்ளேன்
மகளே கண்டிப்பாக பாராட்டு இந்த தந்தையின்
விட்டு சென்ற சொத்துகள் காட்டும் மழையற்ற வானத்தை,

நாங்கள் பார்த்த இமயத்தை உனக்காய் படம்
பிடித்து வைத்திருக்கிறேன் என் மடிக்கணிணியில்
நான் நட்டு வைக்க மறந்த மரத்தால் உனக்கு
பார்க்க கிடைக்காது அந்த உலக அதிசயம்,

தீவுகள் மிக அழகானவை, நால் புறமும்
நீர் சூழ, நீல வட்டமாய், பச்சை வட்டமாய்
இயற்கை பிரதேசமாய் இருக்கும், என் பயணக்
குறிப்பை பார்த்து தெரிந்து கொள்,

அனைத்தையும் குறிப்பாகவும், படமாகவும்
வைத்து செல்வேன் நான், ஏனென்றால் எங்களுக்காய்
வாழ்ந்து உலகைக் கொன்ற பிறவிகள் நாங்கள்,

ஏக்கர் கணக்கில் காடுகளை கொன்று அதில்
உல்லாச நீர் விளையாட்டு வைத்து மகிழ்ந்தோம்
நீங்கள் வந்து பார்க்கும் பொழுதினில் பூங்கா
இருக்க, நீர் தான் இல்லாமல் போகும்,

பூக்களின் வாசத்தையும் வண்டுகளின் ரீங்காரத்தையும்
அருவியின் சலசலப்பையும் காடுகளின் நிசப்தத்தையும்
எங்களுடனே கொண்டு செல்கிறோம், நீரும் காற்றும்
கெட்டுப் போய் என்னை எப்பொதேனும் நினைக்க நேர்ந்தால்

இந்த கவிதையை வாசித்து பார்,
முடிந்தால் நீயாவது ஒரு மரம் நட்டு
என்னை மன்னிக்கப் பார்…

– காவிரிக்கரையோன் MJV

Series Navigation

காவிரிக்கரையோன்

காவிரிக்கரையோன்