வேத வனம் -விருட்சம் 78

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

எஸ்ஸார்சி


இந்திரனே நீ
சகோதரனில்லாதவன்
உனக்கு போட்டி ஏது
உறவுமுறை ஏதும் இல்லோன் நீ
போர் ச்செய்து
பந்தம் பெற்றோன் நீ
ஆவின் பால் விரவி மகிழ்ச்சி தரும்
பெருமைமிகு சோமம்
முன்பாக பறவையென அமர்ந்து
நின்னை யாம் கானம் செய்கிறோம் (சாம வேதம் காண்டம்42)
சோமம் தாரையெனப்பாய்ந்து
சத்தியக்கூடம் அமர்கிறது
சோமமே சொர்ண ஊற்று
செல்வம் தருவது
பொழிபடும் சோமம்
உத்தம அவிசாகும்
பொன் வண்ணக்கலசம் நிறைவதும் அதுவே ( சா. வே. 53)
சோமமே கலசம் ஏகுக
வேள்விக்கூடம் எழுந்தருள்க
மகத்தான செயல்
செய்வோன் தம் உறவோடு
ஒலி எழுப்பி
பாதம் புதையச் சேற்றில் முன்னேறும்
பன்றிபோலே சோமம் வருக
பசுக்களொடு கோபாலனை
வழி படுவோர் சோமனைச்சேர்கின்றனர்
வேள்வித்தலைவன்
முவ்வேதங்கள் மொழிகிறான்
சத்தியத்தின் விரி வானமும்
பிரம்மத்து ஆழ் உள்ளமும்
வெளிச்சமாகின்றன
மனித முயற்சியின்
விளைவாய் தோன்றியது இத்தேவரசம்
பசு கொட்டகைக்குச்செல்லும்
கோபாலனாய்
சோமம் இங்கு கானம்
இசைத்துப் பவனி செல்கிறது
ஞானமாம் தந்தை
விரியும் வானம்
அகிலத்தின் பிதா
அக்கினியின் அப்பன்
சூரியனைப்பிறப்பித்தோன்
இந்திரனொடு விஷ்ணு
சோமனே கொணர்கிறான்
வழங்கும் குணமுடையோன் வருணன்
சேம நதி யவன்
விரும்பியது கொணரும்
வானத்து மழையவன் ( சா. வே 54)
சோமன் தேர்முன் செல்வோன்
வெற்றி தருவிப்போன்
மகிழ்விப்போன் நட்பு காப்போன்
பொன் வடிவுடையச்
சூரியக்குழந்தை
சோமக்கலசத்தலைவன் இந்து
வாயு வேகன் அறிவுக்கடல்
பகை ஒழிப்போன்
தனம் தருவோன்
ஏ இந்துவே சோமனே
மஞ்சள் நீர் நிலையில்
ஒடோடி வாரும்
கானத்தால் அறிவிப்போன்
பேசுமொழிக்கு மூலன்
தண்ணீர் எழு அலைகள் போல்
மனமெழுது துதிகள்
சோமனைச்சேர்கின்றன
தாமே விரும்பி
தன்னையே விரும்பும்
சோமம் அடைகின்றன
மனம் சொல் துதிகள். ( சா.வே. 55)ச
இளைஞர்கள் எப்பெயர்கொண்டு
ஆக்கம் பெறுகிறார்களோ
அப்பெயருக்கு
விசுவாசிகள் பெருகிப்
போகிறார்கள்
எங்கேயும் செல்லும்
மாச்சூரியன்
தேரிலேதான் எல்லாமறிந்தோர்
அமர்கின்றனர் ( சா.வே 57)
இந்திரனே ஆன்மாவே
கருப்பு சிவப்பு
வண்ணம் பலவென
ஒளிர்பவன் நீ
காலையில் ஒளி வீசு உஷை
உலகில் பொருட்களத்தனையும்
தாங்கு விசை
தேவர்களின் நிர்மாண வலு
மனிதரை க்கண்ணுறும் பிதிர்கள்
கர்ப்பம் சேர்கின்றனர்
எல்லாஞ்செய்வோன் இந்திரன்
தேர் யானை
குதிரை காலாள்
எனப்படைகள் எப்பிரிவிலும்
எம் வெற்றிக்கு உறுதிக்
காப்பாவான் இந்திரன் ( சா.வே.62)
பெய்த மழைக்கூடிக்
கலக்கின்றது ஒன்றாய்
வேறு பல நீரும் அதனில்
கூடுகிறது ஆங்கே
நதியென உருவாகி
சமுத்திரப்பயணம்
எப்பக்கமும் விரிகின்ற வானம்.
சமுத்திரத்தாய்ப்பெற்றது
ஒளியெனும் மகனை
சமுத்திரம் சூழவே அவன்.
இரவு யுவதியவள்
சுகம் தருபவள்
எங்கும் உறைபவள். ( சா.வே 62)
வசந்தம் மகிழ்ச்சி தருவது
கோடை இன்பம் தருவது
மாரி இலையுதிர் காலமொடு
பனிபெய்போதும் குளிரும்
ஆனந்தம் கொணர்வன

ஆயிரம்தலைகள் ஆயிரம் கண்கள்
ஆயிரம் கால்களொடு
அனைத்திலும் விரவி
பத்துதிசைகளிலும் உறைந்து
இந்திரியங்களில் நிலைத்து
சத்து சித்து ஆனந்தத்தால்
அமைந்தோன் புருடன்
அவனை அறியலாம்
எங்கும் விரவிடும்
ஞானமே சாதனம்
உண்பொருளும் இங்குள
உண்ணாப்பொருளும்
அவனேயாதல் அறியலாம்
இறந்தகாலம் எதிர்காலம்
அவனது
மூன்று பாகம் வானத்தில்
உலக உயிர்கள் எஞ்சிய ஒன்று
புருடனிலிருந்து விராசன்
அவனின்று பெரும் புருடன்
அவனே விராடன்
தேவரும் மனிதரும்
பூமியும் அகிலமும்
தோற்றம் விராடனிலிருந்தே ( சா.வே. 64)
வெல்வோன் வெல்லமுடியாதோன்இந்திரன்
வருக எம்மிடம்
அருந்தனம் அருள்க
எம் பகைவர் இல்லாதொழிக
இல்லாதொழிக
எம் எதிரிகள் என்றென்றும். ( சா. வே. 65)
—————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி