வேம்பும் வெற்றிலைக் கொடியும்

This entry is part of 24 in the series 20100326_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்வேம்புச் செடிக்கருகே
வெற்றிலைக் கொடி

வேம்பு உயர்ந்தது
வெற்றிலை படர்ந்தது

வேம்பு சொன்னது
‘நண்பா
என்னைச் சுற்றிக்கொள்
என்போல் உயரலாம்’

வேம்பின் நட்பில்
வெற்றிலை நெகிழ்ந்தது
சுற்றிச் சுற்றித் தொழுதது
வேம்பு உயர
வெற்றிலையும் உயர்ந்தது

வேம்பு விரிந்து
வெய்யிலை மறைத்தது
மூச்சுத் திணறியது வெற்றிலைக்கு
அபயம் கேட்டுக் கதறியது

‘நெருப்பாய் எரிகிறது மூச்சு
அய்யகோ எனைக் காப்பாற்று’

‘தயாளனாய் வருவேன்
தைரியமா யிரு’
குரலில் தேன் சேர்த்து
தழைகளை தாராளமாய்
விரித்தது வேம்பு

சிறுகச் சிறுகச்
செத்தது வெற்றிலை
அதையும் உரமெனச்
செரித்தது வேம்பு

Series Navigation