இரண்டு கவிதைகள்

This entry is part of 29 in the series 20091225_Issue

ஏ.தேவராஜன்,மலேசியா


1
வானம் பிளந்து கொண்டது
யாரும் எதிர்பார்த்திடாத் தருணத்தில்

நட்சத்திரங்களோ இராட்சசக் கற்களோ
உதிர்வதற்குப் பதிலாக
மனித சாயலில் சதைப் பிண்டங்களாகப்
பெருத்த கவிச்சியுடன் விழுந்தன

மனிதர்கள் அவற்றைப் பெறுக்கி
ஒவ்வொன்றாய் இணைக்கத் தொடங்கினர்

மொட்டை மரத்து உச்சாணிக் கொம்பில்
கழுகொன்று வெகு நேரமாய்
உன்னித்தபடியிருந்தது

இணைக்கப்பட்ட சதைப் பிண்டங்கள் குறித்து
மனிதர்களுக்குள் மோதல் வலுத்துச்
சாத்தான் எனவும்
கடவுள் எனவும்
சாத்தானின் வகைகளுள் ஒன்றெனவும்
கடவுளின் அவதாரத்தில் ஒன்றெனவும்
மனிதர்கள் கைகலப்பில் இறங்கினர்

கழுகொன்று முடிவெடுக்க நேர்ந்தது

சட்டெனக் கீழ் நோக்கிப் பறந்து
திகட்டத் திகட்டக்
கொத்தித் தின்றது
சிதறு தேங்காய்களாய்க் கிடந்த
மனித உடலங்களை

2

ஒரு நாள் முழுக்க
உடம்பில் மேய்ந்து
அடங்குகின்றன
பிராணிகள்

பிராணிகளைக் கொல்வது
பாவமென்றாலும்
அவற்றின் அசூசையில்
எனக்குக்
குமட்டிக்கொண்டு வருகிறது

நிர்வாணமாய்க் கிடக்கிறேன்
நான் விரும்பும் பிராணியொன்று
என்னில் மேய்ந்ததே கிடையாது

நானும் மேய்வதறியாது
அப்பிராணியாய்க் கிடப்பதாக
என்னில் மேய்ந்த பிராணிகள்
பகடி செய்கின்றன

மேய்ச்சலுக்குச் செல்வதாய்
வீராப்புக் காட்டி
கொட்டிலுக்குள் அடங்கிவிடுகிறேன்
ஒவ்வோர் இரவும்

சில மாமாங்கங்கள் கழித்து
எனக்கு விடுதலை தருவதாக
மேய் பிராணிகள்
இரக்கப்படுகின்றன

அதற்குப் பின்னான வாழ்வு பற்றி
எண்ணிப் பார்க்க
அவை எனக்குச்
சொல்லித் தரவில்லை

ஏ.தேவராஜன்,மலேசியா
ovilak@yahoo.com

Series Navigation