காதல்

This entry is part of 30 in the series 20091218_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


பிறைக்குள் நிலா
உன் நெற்றிப் பொட்டு

உன் குறுஞ்செய்திதான்
எனக்குக் குறுந்தொகை

எல்லாரும் கேட்கிறார்கள்
நீ யார் மாதிரி என்று
மோனலிசாவுக்கு ஏது முன் மாதிரி

நீ கடந்து போகிறாய்
புறாக்களும் மைனாக்களும்
திரும்பிப் பார்க்கின்றன

சடை சாரை
சொருகினால் பூ வாழை
விரித்தால் புகை உன் சிகை

சூரியனைச் சுற்றுவது
அலுக்கவே யில்லை பூமிக்கு
உயிர் தருகிறான் சூரியன்
உருவம் தருகிறாள் பூமி
காதலுக்கு தூரங்கள் பொய்

பூ கனி பூ
கோழி முட்டை கோழி
குழந்தை மனிதன் குழந்தை
ஒன்று முடிகிறது இன்னொன்று பிறக்கிறது
முடிவே இல்லாதது காதல்

குறுத்து விரியும்போது
அங்கே ஒரு காதலும் விரிகிறது
அதன்பிறகுதான் இளநீர்

பதின்மூன்று பிள்ளைகள்
மும்தாஜ் பெற்றாள்
தாஜ்மகாலைப் பெற்றான் சாஜஹான்
காதல் கசக்காது

தொட்டுவிட்டேன்
சிணுங்கியது தொட்டாச்சிணுங்கி
விரியும்வரை நான் விலகவே யில்லை
உன்னையா சிணுங்க விடுவேன்?

தோண்டத் தோண்ட
நீரும்வருகிறது நெருப்பும் வருகிறது
எப்படி?
காதலிடமும் பூமியிடமும்
காரணம் கேட்காதீர்கள்

ஆறுக்கும் வேருக்கும்
காற்றுக்கும் காதலுக்கும்
பாதை சொல்லாதீர்கள்

ஒரு காதலைச் சொல்லத்தான்
பனித்துளி புல்லுக்கு வருகிறது

Series Navigation