வேத வனம் விருட்சம் -61

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

எஸ்ஸார்சி


எம்மை எதிர்ப்போன்
தச்யுவோ
ஆரியனோ
தேவப்பகைவனோ
யாராகில் என்ன
இந்திரன்
எமக்கு வெற்றியே அருள்வான் ( ரிக் 10/38)

அசுவினிகள் வருக
சத்தியம் பேசும் எமது
மொழியை உற்சாகப்படுத்தும்
நாசத்தியர்களே
குடும்பப்பெண்களுக்குச்
செல்வமாயிருங்கள்
இல்லாதோர்க்கு எளியோர்க்கு
கண்களில்லாதோர்க்கு இன்னும்
வீழ்ந்துவிட்டோர்க்குப்
பக்கமிருந்து ஆதரியுங்கள் ( ரிக் 10/39)

அக்கினி முதலில்
அருணனாய் வந்தான்
எம் நடுவேஅவன்
வேள்வியில் எழுந்தான்
மக்கள் இடையோ
அவன் தண்ணீர் ஆகினான்
தெரிந்தோர் அவனை இவண்
தீயாய்க்கும்பிடுவர் (ரிக்10/45)

உணவொடு பசு
குதிரை செடிகொடி
விருட்சம் மலை
தண்ணீர் மண்ணொடு
விண் எழு கதிரோன்
தந்தது
தேவரின் கொடை மனம்
ஆரிய விரதம் காக்கும்
குணமுடைத்தேவர்கள்
எங்கும் இருக்கிறார்கள். ( ரிக் 10/65)

அறிஞர்கள் மாவு சலிக்கும்
சல்லடையாய்
மனத்தைச்சலிக்க
மொழி வளம் பெற்றது
முனிவர்கள் உள்ளம் உறைந்தமொழி
கற்றவர் வசமானது
ஏழு பறவைகள்
.இசைந்தே நாத சுரம் நல்கின

மொழியை ஒருவன் காண்கிறான்
ஆனால் காணாதவனாய் ஆகிறான்
மொழியை ஒருவன் கேட்கிறான்
ஆனால் கேளாதவனாய் ஆகிறான்
எப்படியோ மொழி
என்னும் ஒரு பெண்ணாள்
அழகு ஆடை அணிந்த
மனையாள் தன் கணவனுக்கு
தன் திரேகம் காட்டிவிடுவதுபோலே
அறிஞர்கட்கு அவள் தானே தெரிகிறாள்

மொழியிடை நட்பு
நிலைத்த ஒன்று
புலவர் குழாம்
அரவணைக்கக்காரணமாவது
மொழியின் சாரம் அறியா
மூடனே
மலட்டுப்பசுபோலே
மலரும் கனியும் ஈனா
மரம்போலே மொழிபாரம் சுமக்கிரான்

நட்பை அறிந்தோனை
விட்டு விலகுவோன் பேசுமொழி
நீசமானது
செவி யிருந்தும் கேளாச்செவியே அவனது
நல்லது செய்தல் அரியாதவனவன்
கண்களும் காதுகளும்
எல்லோர்க்கும் பார்க்கச்சமமே
வலிமையும் கூர்மையும் வேறுவேறு
கிணற்று நீர் குடிக்க
குட்டை நீர் கால் நனைக்க
ஏரி நீரோ உடல் கழுவ
அப்படித்தான் மனிதர் இடையேயும் ( ரிக் 10/71)

சிந்து நதியே
நீயே பசி நீக்கும் சோறு
நீயே அரசன்
நீயே கர்ச்சிக்கும் காளை
எல்லா நதிகட்கும் நீயோர்
மாமுலை
அழகுப்புரவி நீ
செளந்தரவல்லி
ஆடை அன்னம்
பொன்னொடு மயிராடை
செடிகொடி
மது சிந்து மலர்களென
அள்ளி அள்ளித்தருபவள் ( ரிக் 10/75)
———————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி