பொய்யாகிப் போன ஒரு பொழுது

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

ப.மதியழகன்


கோபம் கொண்ட
அம்மா முன்பு நடுநடுங்கியது
அவனுடல்.
பயத்தில் தொண்டையிலிருந்து
குரல் வெளிவரவில்லை.
மனம் மட்டும்,
என்ன காரணம் சொல்வது
என்று ஏற்கனவே முடிவுசெய்தானோ
அதனை ஒருமுறைக்கு இருமுறை
சொல்லி, ஒத்திகைப் பார்த்துக் கொண்டது.
படிப்பதற்கு ஒத்துழைக்காத மனம்
இப்போது அந்நிகழ்வை கூர்மையாய்
கவனித்து தன்னுள்ளே குதூகலித்தது.
அந்த இக்கட்டுலிருந்து மீள
பொய் சொல்வது ஒன்றே வழி
என அவன் உள்ளத்தில்
தீர்மானம் பிறந்தது
இவ்வாறாக பால்யத்திலேயே
பொய் சொல்லும் பழக்கம்
அவனை சர்ப்பமாய்
சுற்றிக்கொண்டது
பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால்
அது மெய் – என்ற கோயபல்ஸ் தததுவத்தை
அச்சிறுவயதில் அறியாத போதும்
பொய்கள் அவனை நிழலாய்
பின் தொடர்ந்தன…
அம்மா மரணமடைந்த பொழுது
அவனுடைய பொய்களின் எண்ணிக்கை
வெகுவாக கூடியிருந்தது
அவன் தனது நாவினால் வெளிப்படுத்திய
பொய்களின் பாரத்தை
தாங்கிக்கொள்ள இயலாமலேயே
தனது அன்னை இறந்தாலோ என
எண்ணி எண்ணி
அவனுடல் குலுங்கியது,
அவனுள்ளம் குமுறியது.
அன்றைய தினம்
மயானத்தில் தாயின் சிதைக்கும்
அவனது பொய்களுக்கும்
சேர்த்தே கொள்ளிவைத்தான்.

ப.மதியழகன்

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்