பத்மநாபபுரம்

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

நட்சத்ரவாசி


சரித்திரம் விழுங்கிய எச்சமாய்

கோரைபற்களிடையே தலைகாட்டும்

ஒரு பொடிந்த எலும்புத் துண்டு

மங்கலாய் கலைந்து உறுதியாய்

ஆடுகிறது ஒரு சித்திரம்

நாற்புறமும் கோட்டை எழுப்பி

உன்னை பாதுகாக்க

ஏன் செய்தான் ஒரு பொல்லா பிழை

ஆங்காரமாய் சிரிக்கிறாய்

சற்று கழிந்து மனசாட்சியாய் அழுகிறாய்

யாரின் கோபகுரலுக்கு நீ

பயந்து போகிறாய்

யாரின் சாபத்துக்கஞ்சி நீ

ஒழிந்து கொள்கிறாய்

காலத்தின் ஒவ்வொரு சுவடுகளிலும்

நீ பதித்த ஆழ்ந்த தடம்

கீறிப்பார்க்கையில் விபரீதமாய்

போகிறது.

பாம்புகளோடும்

ஓணான்களோடும்

கொஞ்சி மகிழ்கிறாய்

அரசகட்டளைக்கு

வெட்டுண்ட கைகளோ

சரித்திரத்தில் அதிகாரத்தை

விளம்பிச் செல்கிறது

கந்தர்வ குல பெண்களின்

நாணம் படுக்கையறைகழிலே

கழிக்கிறது

அழகை கேடயமாக்கி

கர்வமுற்று வாழ்ந்தழிந்தவைகளின்

பட்டியலில் பெயரொன்றும் இல்லை

வல்லுறுக்களையும்

கழுகுகளையும்

பழக்கப்படுத்திக் கொண்டு

ஒற்றைக்கண்ணைப் பறிப்பது

சாத்தியம் தான்

கண்களில் உதிரம் நனைய

கடைசி காலத்தில்

ஆயிரம் கண்கள் தோன்றி

கொன்றொழித்தன

ஒரு கதையை

ஆயினும் ஒரு பொழுதில்

அந்த பூமியில் பிறந்த நான்

மலையாள தாலாட்டில்

உறங்க வேளிமலையும்

நிலாக்கொண்டு வந்தது

பின்னாளில்

நானாவேன் என்றறியாமல்

குழந்தை உறங்கிப் போனது.

நீ கண்களை காட்டி

விளையாட்டு காட்டினாய்

அரிச்சுவடி கற்பித்து

புலவனாக்கினாய்

உறைவாள் சுழற்றி

வீரனாக்கினாய்.

காலம் குமைத்த பிழைகளில்

யாதொன்றுக்கும் நீ

பொறுப்பாளனல்ல.

உனது இருத்தலில் எனது

மனம் கவிதைபாடும்

உனது மூச்சுக்காற்று

எனை திரும்ப அழைக்கிறது

நான் வருவேன்

உனை காணவேண்டி

தொழுது வலம் வர வேண்டி.

mujeeb.h

Series Navigation

நட்சத்ரவாசி

நட்சத்ரவாசி