மனப்பதிவுகள்

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

ப.மதியழகன்


மனப்பதிவுகள்

என்னைக் கடந்து சென்றுவிட்ட தென்றல்
இப்பொழுது யாரைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறதோ…
நதியில் நேற்று பார்த்த நீரலைகள்,
இக்கணத்தில் பலமைல் பயணப்பட்டிருக்கும்
ஆனால், இன்று கண்ட நீரலைகளிலும்
என் முகம் தெரிந்தது.
குலை, குலையாய் பனங்காய்கள் உள்ள
பனை மரததை விட, அவற்றுக்கிடையே நிற்கும்
மொட்டைப் பனைமரமே
கண்களின் கவனத்தை ஈர்க்கின்றது.
வெகு உயரத்தை அடைந்துவிட்டால்
செயலற்று சும்மா இருக்கலாம்
என்பதை ஆகாயத்தில் மிதக்கும்
கழுகு உணர்த்தியது.
இப்பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளும்
சமீபத்தில் நம்மை விட்டு
மறைந்து போனவர்களின்
ஞாபகச்சுவடுகளை
மனஅடுக்குகளிலிருந்து தட்டி எழுப்புகின்றனவாய்
அமைந்திருக்கின்றன.
சூரியனுக்கு கீழே ஆயிரமாயிரம் மாற்றங்கள்,
வளர்ச்சிகள், கொண்டாட்டங்கள், பேரழிவுகள்,
அதிசயங்கள், ஆடம்பரங்கள்
ஆனால் கதிரவன் எவற்றையும்
பொருட்படுத்துவதில்லை
அப்படி இருப்பதால் தானே அவன் ஆதவன்.

அவனும்…. அவளும்…

அவன் பயணிக்காத ஊர்களின்
பாதைகளாய் அவள்
அவன் எழுதாத கவிதைகளின்
வரிகளாய் அவள்
அவன் வரையாத ஓவியத்தின்
தூரிகையாய் அவள்
அவன் படிக்காத புத்தகத்தின்
பக்கங்களாய் அவள்
அவன் சுவைக்காத பழங்களின்
ருசியாய் அவள்
அவன் ரசிக்காத மலர்களின்
எழிலாய் அவள்
அவன் பாடாத பாடல்களின்
ஜீவனாய் அவள்
அவன் வாழாத வாழ்கையின்
அனுபவமாய் அவள்.

mathi2k9@gmail.com

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்