தலைகவிழல்

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

பா.சத்தியமோகன்



உங்களுக்கும் இது நேர்ந்திருக்குமோ அறியேன்

ஆனால் எனக்குள் இருவர்

ஓயாமல் தொல்லை செய்கின்றனர்

ஒருவர் பெயர்: காரணம்

இன்னொருவர்: காரியம்

என்னை அவர்கள்

பிறப்பிலிருந்தே தொடர்கிறார்கள்

சுவர் தாண்டுவதுபோல இவர்களைத் தாண்ட

எப்போதும் முயல்கிறேன் –

சுதந்திரமாக இருக்க முயலும் ஆசையால்.

ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை

ஒருகணமும் விடாமல் என்னுடன்

கூடவே பயணிக்கிறார்கள்

அவர்களுக்குத் தெரியாமல்

குளியலறை கூட போகமுடியாது

“இப்போது ஏன் இதைச் செய்கிறாய் தெரியுமா?”

“உன் அழுக்கு நீங்குவதற்கு!” என்பதைக்கூட

ஓயாமல் அவர்களே பேசித் தீர்க்கின்றனர்

என்னால் அவர்கள் பாரத்தைச் சகிக்க முடியவில்லை

சுதந்திரம் விரும்புகின்றேன்

தினமும் கெஞ்சிவந்தேன் .

அவர்களோ தீர்மானமாக

தாம்புக்கயிறோடு என் செயலுக்கு முன் நின்றார்கள்

ஒரு நாள் –

மலரையும் விஞ்சும் குழந்தை ஒன்று

தெரு மண்ணில் விரல் நுழைத்து

அரைஞாண்கயிறுடன்

அவ்வளவு சந்தோஷமாக விளையாடியது

“போங்கள்!

நீங்கள் அந்தக் குழந்தையிடம் ஒன்றுமே

செய்யமுடியாது” என்றேன் –

அவர்களிருவரும் தலைகவிழ!

***

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்