காட்டுவா சாகிப்

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நேற்றைய வருடங்களை தின்று தீர்த்து

ஓய்வெடுத்துக் கிடக்கும் பாதை

மலையேற்றத்தில் கலந்து கொள்ளும்

முட்டாக்கிட்ட உம்மாமார்கள் குழந்தைகள்

காட்டுவாசாகிபின் ஞாபகங்களோடு

மலையேறிப் பார்த்த கால்கள்

களைப்பில் உட்கார இடம் தேடும்

செங்குத்து உயரத்தில்

பெரும்பாறைகளின் சூழலில்

ஒற்றையடிப்பாதை நீண்டு பெருகும்

கூட்டம் கூட்டமாய் கால்கள்

மூச்சிறைப்பு தீர ஓய்வெடுக்க

முந்தைய பாதையோர குதிரைக்காவின்

மாறிப் போன அடையாளம்.

தலைக்கு மேல் மிரட்சியுற வைக்கும்

ராட்சச பாறைகளின் மீதேறி நின்று

உலகம் முழுதும் கேட்கும்படி

கூவிப் பார்க்கும் ஒற்றைக் குரல்

மலைப்பள்ளியில் நாட்டப்பட்டிருந்த

கொடிக் கம்பம் சாய்ந்திருந்தது.

காட்டுபாவாசாகிப் உட்கார்ந்து

சயனித்த இடம் எதுவாய் இருந்திருக்கும்.

பச்சைப் பிறைக் கொடியில் பூச்சுற்றி

திரிவாசம் பரவ மெளலூதும் பாத்திஹாவும்

காலந் தோறும் வந்து போகும்

மும்தாஜ்கள் உசேன்கள்

சுனைநீரில் கால்நனைத்து

தண்ணீருக்குள் தேடி கண்டுபிடித்து

கொண்டு வந்த கற்கள்

ஆயிரக் கணக்கில் பெருகி

ஆலமரத்தின் மூட்டைச் சுற்றி

இன்னொரு கல்மலையாகி நிற்கும்.

அதன் அழகுகளும் அடுக்குகளும்

கலைக்கப் பட்டிருக்கின்றன.

சிதறிக் கிடக்கும் பாறைக்கற்கள் ஒவ்வொன்றும்

ஒவ்வொரு நம்பிக்கைகள்

சின்னஞ்சிறு கனவுகள்

பாறக் கோலால் இடித்து தகர்க்கப்பட்ட

உடைந்து போன மினராவின் துண்டுகளில் ஒன்று

இப்போதும் அங்கே கிடந்தது.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்