தாயெனும்…

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

ப.மதியழகன்


தாயெனும்…

பிறந்தவுடன்
தொப்புள் கொடி அறுந்தது
நடக்கப் பழகியவுடன்
கைப்பிடியும் தளர்ந்தது
மீசை அரும்பத் தொடங்கியவுடன்
எந்த விவகாரத்திலும்
அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற
அச்சமே அவள் மனதில்
வியாபித்திருந்தது
பட்டம் பெற்றவுடன்
பறக்கப்பழகிய குஞ்சுகளை
இரையை தேடிக்கொள்ளச் செய்ய
தாய்ப்பறவை
தனது அலகால் கொத்தித் துரத்துமே
அதுவும் அவள் வாய்வழியே
வெளிப்படுத்திய வார்த்தைகளால் நிகழ்ந்தது
பணிபுரியும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
சிறு நூலாகத் தொங்கிக்கொண்டிருந்த
உறவுக்கயிறு பட்டென அறுந்தது
அவனை மடியிலும், மார்பிலும் சுமந்த
தாய் எனும் தெய்வம்
புவி விஜயத்தை நிறைவு செய்து
கடமைகள் செய்து களைத்ததால்
ஓய்வெடுக்க கல்லறையை அடைந்தது
நேற்று வரை கண்ணெதிரே உலாவிய
ஒரேயொரு தெய்வமும்
இன்று அவன் கண்களைவிட்டு மறைந்தது.

நிலா சோறு

அந்த சிறு வயதில்
அமாவாசை, பெளர்ணமியெல்லாம்
என்னவென்று எங்களுக்குத்
தெரியாது
ஆனாலும்
வாரத்தில் இருமுறையாவது
வானில் முழுநிலவு
தோன்றிடவேண்டுமென்று
ஆசை எங்களுக்கு
அப்பொழுது தான்
நாங்கள் குடியிருக்கும்
காலனிவாசிகளனைவரும் ஒன்று கூடி
மொட்டை மாடியில் நிலா சோறு
சாப்பிடுவோம்
மற்ற நாட்களில்
வெண்டைக்காய், சுண்டைக்காய்,
பாகற்காய் – என்றால்
தட்டிலேயே ஒரு ஓரமாக
ஒதுக்கிவிடும் நாங்கள்
அன்று மட்டும், நிலாவில்
வடைசுடும் பாட்டி
இரக்கப்பட்டு இலவசமாகக் கொடுக்கும்
வடையைத் தொட்டுக் கொண்டு
அடம்பிடிக்காமல் சமத்தாகச் சாப்பிடுவோம்
தற்போது
சந்திராயன் நிலவைத் தொட்டவுடன்
இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில்
அந்தப் பாட்டி இன்னும்
வடை சுட்டுக்கொண்டிருக்கிறாளா என்று
கண்ணிமைக்காமல் தேடினேன்,
எங்கும் காணவில்லை…

பால்யம் எப்போது தொலைகிறதோ
அப்பொழுதே அப்பாட்டியும்
மறைந்து விடுவாள் போலும்
தேடும் விழிகளிலிருந்து!

கனவு

தங்களது கனவுகளை
நிறைவேற்ற
பிள்ளைகளை நிர்பந்திக்கும்போது
பெரும்பான்மையான தந்தைகள்
மறந்துவிடுகிறார்கள்
குழந்தைகளுடைய கனவுகளையும்,
தங்களுடைய தந்தையினால்
நசுக்கி ஓரங்கட்டப்பட்ட
அவர்களுடைய பதின்வயது
கனவுகளையும்…

mathi2k9@gmail.com

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்