நினைக்கத் தெரிந்த மனம்…

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

’ரிஷி’


குற்றவுணர்வு கொள்ள வேண்டியவற்றிற்கான பட்டியல்
நீண்டுகொண்டே போகிறது.
நினைக்கத் தெரிந்த மனம்
நியாயம் புரிந்த மனம்
நிம்மதியாய் எப்படியிருக்கவியலும்?

அலைந்து களைத்து வந்து உண்ணத் தொடங்கினால்
கண்முன்னம் தொலைக்காட்சியில்
பின்பக்கமாய் கை கட்டப்பட்ட நிலையில்
உன்னையும் என்னையும் அம்மணமாக்கி
நெட்டித் தள்ளியவாறே
குறிபார்த்துப் பின்மண்டையில் சுட்டுக் கொல்கிறார்கள்.
அதற்கு முன்பாக உனது குறியையும்
எனது முலையையும்
திருகியெறிந்துவிட்டார்களோ ?
அல்லது, வெட்டியெடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்களோ…
இருட்டிக் கொண்டு வருகின்றன கண்கள்.
எர்கிறது உடலெங்கும்.

நினைக்கத் தெரிந்த மனம்
நியாயம் தெரிந்த மனம்
நிம்மதியாய் எப்படியிருக்கவியலும்?

அந்தத் திறந்த வெளிகளில், ரகசியச் சிறைகளில்
அனுதினமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் அக்கிரமங்களைக் கண்டு
இயற்கையும், இறகுடை பறவைகளும்
ஊர்வன பறப்பன வேறென்னென்னவும்
அதிர்ந்துபோய் வீறிடத் துவங்க
அணில் டினோசாராகவும்
குருவி வல்லூறாகவும்
துரிதகதியில் உருமாறி
விரைந்து முன்னேகி,
கெக்கலித்தவாறே ரத்தம் கொப்பளிக்கச் செய்துகொண்டிருக்கும் சீருடையாளர்களை
சீறித் தாக்கத் தொடங்கின்றன.
மடைதிறந்த வெள்ளமாய் அந்த
ஐந்தறிவு உடன்பிறப்புகளிடமிருந்து பெருகும் அன்பில்
மதிப்பழிந்து மந்தைகளாய் மின்கம்பிவேலியிட்ட கொட்டகைக்குள்
அடைபட்டுக் கிடப்பவர்கள், அல்லலுற்றுக் கிடப்பவர்கள்
மீண்டெழட்டும், புண்களும் காயங்களும்
பூண்டோடு அழிய.

போயும் போயும்,
அரும் உயிர்களின் அழிவை வெறும்
புள்ளிவிவரக்கணக்காக மட்டுமே பொருட்படுத்திக் கொண்டிருக்கும்
காரியவாதிகளிடம் முறையிட்டுக் கண்டதென்ன?
ஆறறிவில்லையானாலும்
நாயும் பேயும் கூட மேலானவையே என்பதில் ஐயமென்ன?
ஆய தொலைநோக்குப் பார்வையோடு
கொள்கைத் திட்டங்கள் தீட்டவும்
கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யவும்
விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன
சர்வதேசங்களும்.
நாசங்கள் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கட்டும்.
அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டு
நிரம்பி வழியும் கழிவறைகளும்
நிதம் அழியும் இளந்தலைமுறையினருமாக
கலங்கிக் காலங்கழித்து வரும்
பழிபாவமறியா அப்பாவி மக்களுக்கு
தப்பாமல், தாமதியாமல் உதவி செய்ய
அதிகாரப் பொறுப்பிலுள்ளவர்களுக்கு எப்போதாகிலும் நேரமிருக்குமா தெரியவில்லை.
எனவே தான் இறுதிமுயற்சியாய் உங்களை நாடி வந்துள்ளோம்.
ஊர்வனவே, பறப்பனவே, நாற்கால்-ஆறுகால் உயிரினங்களே
கதிரே, காற்றே, கடலே, மலையே, –
அடிபட்டு மிதிபட்டு கதிகெட்டு விதியற்று
ஆற்றொணாத் துயர் மண்டி
புழுதி படிந்து பட்டுப்போய்க் கொண்டிருக்கும்
எம் முன்னோர்களுக்கு, வழித்தோன்றல்களுக்கு
மானுடவாழ்வை உறுதி செய்யுங்கள்.
மன்றாடிக் கேட்கிறோம்.

மீண்டும் மீண்டும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது மாபாதகம்.
நினைக்கத் தெரிந்த மனம்
நியாயம் புரிந்த மனம்
நிம்மதியாய் எப்படியிருக்கவியலும்?

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி