மரணத்தைத் தவிர வேறில்லை

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

மனோ.மோகன்


எனது நாட்குறிப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட
உனது பழைய எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை
மொத்தம் இரண்டாயிரத்து நூற்று தொண்ணூறு
பூச்சிகள் அரித்துச் சிதைந்த எலும்புக்கூடு
மட்கியும் மட்காமல்
சதையொட்டிய எலும்புக்கூடு
வகுப்பறைக்குச் செல்லும் பாவனையில்
நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட எலும்புக்கூடு
சில எலும்புக்கூடுகளில்
பற்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால்
எண்ணிக்கை கூடலாம் குறையலாம்
பொத்தல் விழுந்த குரூர விழிகளுடன்
புன்னகைத்துக் கொண்டே
எனது உறக்கத்தைத் தின்றுகொண்டிருந்த
கீறல் விழுந்த மண்டையோடுகள் சிலவற்றில்
புராதன மொழியில் எழுதப்பட்ட
கனவுகள் பொறிக்கப்பட்டிருந்தன
எழுதப்பட்ட கனவுகளில் சில
கடவுளின் பெயரால் புனையப்பட்ட தொல்கதைகளாயிருந்ததையும்
தொல்கதையிலுலவும் கடவுளரனைவரும்
உனது பெயரில் இருந்ததையும்
கல்வெட்டு ஆய்வாளர் சொல்லிப் போனார்
வரலாற்றாஸிரியருக்குத் தெரிய வராத
இருண்டகாலக் குறிப்புகளடங்கிய
உனது ஆவணங்களுக்கென
அருங்காட்சியகம் அமைக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன்
நீ உயிர்த்தெழுந்து வருவதற்குள்
உனது மதத்தின் வேதாகமத்தை
எழுதி முடிக்க வேண்டியிருந்ததால்
புராதன ஞாபகங்களோடு உறங்கப் பழகிக் கொண்டேன்
புராதன ஞாபகமென்பது வேறொன்றுமில்லை
ஒவ்வொரு கணமும் எரியூட்டி
நிகழ்த்திப் பார்க்கப்பட்ட எனது மரணத்தைத் தவிர


manomohan1982@yahoo.com

Series Navigation

மனோ.மோகன்

மனோ.மோகன்