வேத வனம் – விருட்சம் 44

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

எஸ்ஸார்சி


மேகங்களை உலுக்கி
சலத்தை வர்ஷிக்கும்
ஒ மருத்துக்களே
காடுகள் உம்மை ஆராதிக்கின்றன
எமக்கு ஆ அசுவம்
தேர் செய் தேட்டம்
ஆண் வாரிசொடு
புகழும் தாருங்கள் ( ரிக் 5/57)

அக்கினியே நீ
அரணிக்கட்டையில் வதிவோன்
அவியை ஒர் அசுவமாய்
ஏந்திச்செல்வோன்
காற்றுபோல் எங்கும் வியாபி
வதியும் மனையோடு
உண்ணும் உணவு நீ
பிறந்த குழவிபோல்
எப்போதும் புதியவன்
பசுப் புற்களை மேய்வதொப்ப
விருட்சங்களை புசிப்போன் நீ
தேவர்க்கு எம்
தோத்திரங்கள் எடுத்துக்கூறு ( ரிக் 6/2 )

இந்திரன் ஒயாப்போராளி
வேள்விக்கு உறுதுணை
எப்போதும் நன்மை செய்பவன்
மனு வமிச மக்களை
பாலிக்கும் சோமம் அருந்தி
பலவான் அவன்

தச்யுக்களை வீழ்த்தி
மக்களை ஆரியனுக்காய் வென்றவன்
அது அவன் வீரச்செயல் ( ரிக் 6/18 )

இந்திரனே தயிரொடு
கலந்து சோமம் பருகுக
பரப்பிய தருப்பைப்புல் மீதமர்க
உன்னை விரும்புவோன்
நிலம் நீளட்டும்
பரத்துவாசன் யான்
சோமம் பிழியப்பட்ட அப்போதே
வணங்கும் அவர்களை
காத்திடுக நீ ( ரிக் 6/23)

சூரனே இந்திரனே
ஆரிய எதிரிகள்
தாச ப்பகைவர்கள்
இருவிதத்து மக்களோடு
மோதிப்பின்
வெட்டியும் வீழ்த்தினாய் ( ரிக் 6/33)

விண்ணகக்காளை
புவிக்கும் அப்படியே
நதிகட்குக்காளை
செடிகொடிகட்குமப்படியே
உத்தமக்காளையாம்
இந்திரனே உனக்கு
தேன் சுவை
சோமம் தயாராகிறது.

அவன் சோமன்
உஷைகளைச் சூரியனுக்கு
மணம் முடித்தவன்
சூரிய மண்டலத்தே
வின்ணைச்சமைத்தவன்
புவி அமைத்து
அச் சோமனே
அமிர்தத்தை க்கண்டவன்
கதிரவன் தேருக்கு
ஏழு புரவிகள் பிணைத்தோன்
பசுக்களைத் தீம் பாலொடு
பக்குவமாய்ப்படைத்தோன் சோமனே ( ரிக் 6/44 )
—————————————————-
essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி