சவுக்கால் அடியுங்கள்

This entry is part of 39 in the series 20090716_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


நச்சுப் பொடியைத்
தூவிவிட்டது ஹெச்1என்1
மூச்சுத் திணறலில்
உலக நாடுகள்

சங்கூது கின்றன
பங்குச் சந்தைகள்
திவாலாகின்றன
திமிங்கிலங்கள்

கரியமிலவாயு மிகையாம்
துருவங்கள் உருகலாம்
கடல்மட்டம் உயரலாம்
கலவரப்படுகிறது உலகம்

ஓசோன் படிவத்தில்
ஓட்டைகளாம்
ஒளி இழக்கப்போகின்றன
விழிகள்

வெடித்துச்
சிதறியது விமானம்
கடலுக்கடியில்
தேடப்படுகின்றன
சடலங்கள்

இதைப் பற்றியெல்லாம்
எனக்கில்லை கவலை

என் காப்பிக்கு
எவ்வளவு சர்க்கரை
என் கழுத்துச் சுளுக்கு
என் வீட்டுத்
தண்ணீர்க்குழாயில் கசிவு

இவைகள் மட்டுமே இப்போது
என்னுடைய கவலை

பூமித்தாயின்
பொறுப்பற்ற பிள்ளை நான்
தகுதியுள்ள யாராவது என்னை
சவுக்கால் அடியுங்கள்

Series Navigation