வாழ்வின் நீளம்

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

சக்தி


ஆற்றின் ஓரம்
நடக்கிறேன்
வாழ்வின் நீளத்தை
ரசிக்கின்றேன்

எந்தையும் தாயும்
புரிந்திட்ட
விந்தையாய் நானும்
விழுந்திட்டேன்

தந்தையின் கைகளை
பற்றியபடியே
தாயின் மடியில்
விளையாடிய பொழுதுகள்….

நேற்றைய நினைவுகளில்
புதைந்திட்ட வேளைகள்
நாளைய உலகினில்
புலர்ந்திட வழியில்லை

உள்ளத்தினுள்ளே
உண்மைகள் உறைந்தும்
உலகத்தில் அதனை
உணர்ந்தவர் சிலரே

இன்பம் ஒரு பாதி
துன்பம் மறு பாதி
இரவு ஒரு பாதி
பகலும் மறு பாதி

காற்றில் பறக்கும்
சருகினைப் போலே
காலம் எம்மை
உருட்டிடும் உண்மை

நாமே அனைத்தும்
புரிவது போலே
நம்மை நாமே
ஏய்த்திடும் செய்கை

மணலின் மீது
தவழ்ந்திடும் நதியாய்
புவியின் மீது
மிதந்திடும் தென்றலாய்

இதமாய் நாம் வாழும்
இனிமைப் பொழுதுகளை
இறுகப் பிடியுங்கள்
ஈட்டும் இன்பம் அதுவேதான்

ஒருவரை ஒருவர்
மிதித்தே முன்னேறிடும்
பொல்லாத உலகை
இல்லாமல் செய்வோம்

பிறப்புக்கும் இறப்புக்கும்
இருக்கும் இடைவெளி
வாழ்வின் நீளத்தை
அளந்திடும் ஜீவநதி

வாழ்வின் நீளத்தின்
அளவி மைல்களிலில்லை
மனித மனத்தில் விளையும்
நல்ல சிந்தைகளின் கனத்திலுள்ளது


அன்புடன்
சக்தி
http://www.thamilpoonga.com

Series Navigation

சக்தி

சக்தி