மரணம் பேரின்பம்

This entry is part of 32 in the series 20090512_Issue

ரஜித்நான்தான் பூவரசு
விதையாய் விழுந்தேன்
முளைத்தேன்
இலைகளால்
இறை தொழுதேன்
வளர்ந்தேன்

அம்மா மண்
அப்பா சூரியன்
அண்ணன் காற்று
மாமா மழை
எல்லாருக்கும்
நான் செல்லம்
குருவிக்கும் பூச்சிக்கும்
மனைகள் எம்மடிதான்
திருவிழாதான் தினமும்

திடீரென்று ஒருநான்
புல்டோசர்களில் பல
தொப்பி மனிதர்கள்

எனக்குக் கீழே
ஏராளமாய் எண்ணெயாம்
காலைவரைதான்
என் வாழ்வாம்

புயல்செய்தி
என்னைப் பிய்த்துப்போட்டது
கடவுளைக் கேட்டேன்

‘நான் குடையாக நிற்பது
உன் கொடையால்தான்
மரணம்கூட உன்
அருட்கொடைதான் அறிவேன்
ஆனாலும்
தாய் மண்ணைப் பிரிவது
தாங்கமுடியா வலியய்யா
வழியொன்று சொல்வாயா
வலிதாங்க’

‘சொல்கிறேன் கேள்
ஜனனம் இன்பம்
மரணம் பேரின்பம்
இந்த மண்
முளையை முதுமையாக்கும்
நான் முதுமையை
முளையாக்குவேன்
வலிகள் மாயை
பேரின்பம் காண
வா மகளே வா’

‘கடவுளே
பூந்தூரலானது
புயற் காற்று
ஏய் புல்டோசர்
என்ன செய்கிறாய்
நான் தயார்’

Series Navigation