வேத வனம் விருட்சம் 32

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

எஸ்ஸார்சி



இந்திரனே நின்னைப்போற்றுவோம்
நீயோ சோம ரசம் விரும்பி
வச்சிராயுதம் படைத்தவன்
பகைவனின் ஆண்மை தொலைப்போன்
ஆரியர்கள் யாரென்றும்
தச்யூக்கள் யாரென்றும் தெளி
ஆதி காலந்தொட்டே
தச்யுக்களை கொல்லப்பிறந்தவன் நீ ( ரிக் 1.51 )

இந்திரனே
அவிகள் உனக்கு
சோமங்கள் உனக்கு
பசுக்களும் குதிரைகளும்
தந்திடு நீ
தச்யூக்களை வென்று
பகவர்களிடமிருந்து தூரம் போய்
உணவு இன்பம் தருக
இனி எமக்கு. ( ரிக் 1.53 )

ஒ அக்கினியே
நீ மனு வமிசத்தின் தலைவன்
அசுரர்களை வென்று
தேவர்களுக்குச் செல்வம் தந்தாய்
தச்யூக்கள்
வான் மழைக்கு எதிரானபோது
அவர்களைக் கொன்று முடித்த
அக்கினி நீ
எல்லா மனிதர்களிலும்
நீக்கமற நிறைந்து
சத்தியம் பேசுபவன் நீ. ( ரிக்- 1.59)

ஆங்கிரச முனியால்
புகழப்படும் இந்திரனே
கதிரவன் கிரணங்களை கொணர்ந்து
வைகறை வழங்கி
சுவர்க்கத்தின் கீழ் இப்பூவலகை நிறுத்தியவன் நீ.
வண்ணத்தில் வேறான
இரு அழகுப்பெண்கட்கு
சுவர்க்கம் பூமியெனப்
பயணிக்கக்
கரும்பாதங்களொடு ஒளிர்ப்பாதங்கள் ஈந்து
இரவு பகல் ஆக்கியோன் ந.£
கருப்போ சிவப்போ
பசுமாடுகள்.
வெண்மையாய் இனிமையாய்
பால் நிறைகிறது.
கெளதமன் புதல்வன் நோதசு
கற்பித்தப் புது வணக்கம் இது
செயல் கொணரும் செல்வம்
செழிக்கட்டும் எமக்கு
அதுமட்டுமே நிலையானதும்
நீர்த்துப்போகாததும். (ரிக்-1.62 )


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி