பாடுக மனமே

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


எரிந்த புல்வெளிகளில்
இனி வரவுள்ள மழையையும்
பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான்
கலங்காதே தாய்மண்ணே.

என் அன்னையின் திருவுடல் புதைத்த
பூமியைக் காத்து
வீழ்ந்த பெண்களின்மீது
சிங்கள பைலா பாடியும் ஆடியும்
பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும்
நாளைய வசந்தப் பரணியே பாடுக மனமே.

வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின்
எலும்புகள்மீது
எந்தத் தீயும் நிலைக்காது ஆதலினால்
கருமேகமாய் விரியும் சாம்பல் வெளியில் நின்று
இனி வானவில்லாகவுள்ள பூக்களையே பாடுக மனமே.
உறவுகளின் ஓலங்களை அமுக்கும்
தோழ தோழியரின் போர்முரசுகளே
என் வசந்தப் பரனிக்கு இசையுங்கள்.

அம்மா
தமிழ் மண்ணெடுத்து
இன்பப் பொழுதொன்றில்
நீயும் எந்தையும்
அழகுற என்னை வனைந்தீர்களே.
இதோ என் ஐம்பூதங்களால்
உனக்கு வனைவேன் ஒர் அரண்.
உன்னை உதைக்கிற
அன்னியனின் காலை ஒடிக்காமல்
என்ன மசிருக்கு இந்த வாழ்வு.

வன்னிப் பெருந்தாயே
உன் கூப்பிட்ட குரலுக்கு
ஏழு சமுத்திரங்களிலும்
தமிழர் விழிக்கின்றார்.
பாஞ்சாலம் குறிச்சியும்
சிவகங்கைச் சீமையும்கூட விழிக்கிறது.
உலகக் கோடியின் கடைசித் தமிழனுக்கும்
உன் விடுதலைக் கனவுதான் தாயே.

மொழியில் வேரூன்றி
நினைவுகளில் படர்ந்து
கனவுகளில் பூக்கிற
புலம்பெயர்ந்த தமிழன்நான்.
சிறைப்பட்ட என் தாயே
தப்பி ஓடலில்லையம்மா.
ஒடுக்கப்படுகிற ஒரு இனத்தின் புலப் பெயர்வு
பின் போடப் பட்ட விடுதலைப்போர்
வீரமரணம் அல்லது
வெற்றி வாழ்வுதான் தாயே.

நினைவிருக்கிறதா தாயே
“எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்
முகம் கொடுக்கும் புல்வெளிகளோ
பூத்துக் குலுங்கும்” என
வியட்னாம் எரிகையில் நான் பாடிய பாடல்.
என் அன்னை மண்ணில் நெருப்பிடை நின்று
அப்பாடலையே பாடுக மனசே.

Series Navigation