இரு கவிதைகள்

This entry is part of 28 in the series 20090409_Issue

நிலாரசிகன்


1.செந்நிற கூந்தல்காரி

அவள் முகத்தில்
பூனையொன்றின் சாயல்
படர்ந்திருந்தது.
காற்றில் அசைகின்ற
செந்நிற கூந்தலும்
உற்று நோக்குகின்ற
நீல நிற கண்களும்
அவளுக்கு வாய்த்திருந்தன.
உதிரிந்துகிடக்கும்
செர்ரிப் பழங்களை
ஒவ்வொன்றாய் தேடிச்சென்று
மிதித்துக்கொண்டிருந்தவள்
சட்டென்று வான்நோக்கி
பார்த்து சிரித்தாள்.
பின்,
ஏதுமறியா சிறுமியாய்
புல்வெளியில் ஓடி விளையாடினாள்.
பாவம் பைத்தியமென்றார்கள்
பூங்காவிலிருந்தவர்கள்.
மெல்ல மெல்ல
தங்களது முகம்
வேட்டைநாயின் முகமென
மாறிக்கொண்டிருப்பதை அறியாமல்.


2.சிலையுலகம்

உறைந்த மெளனத்தை
உகுத்துக்கொண்டிருக்கும்
அந்தச் சிலையின்
மர்ம அழகிலிருந்து
எழும்பும் இசை
மனதின் ஆழத்தில்
ஒன்றன்மீது ஒன்றாய்
படிந்துகொண்டிருந்தது.

மெளனத்தின்
மென்கரம் பற்றி
சிலையுலகினுள் நுழைந்தேன்.
சப்தங்களால் நிறைந்திருந்த
அவ்வுலகை விட்டு
வெளிக்குதிக்க என்
கரம் பற்றும்
அவசரத்தில் வரிசையில்
நின்றன சிலைகள்.

-நிலாரசிகன்.

Series Navigation

நிலாரசிகன்