சுமந்தும் சார்ந்தும்…

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


அலுவலகப் பணிநிமித்தம்
அயல் நாட்டுப் பயணமொன்றில்

வண்டியோட்டி ஒருவனிடம்
வழக்கப்படி கேள்விகள்

கேட்டபடி மேற்கொண்ட
கார் பயணமொன்றில்

இடம் பற்றிய கேள்விக்கு
இலங்கை என்றவன்

இப்போதைய நிலை அங்கு
இன்று வரை நலம் என்றான்.

மீதிப் பயணம் முழுதும்
முற்றிலும் ஒரு ம(யா)ன அமைதியில்.

மற்றொரு
பயணமொன்றில்

அத்தனைப் பாடல்களும்
அச்சு அசல் தமிழாய்

ஒலிக்க விட்ட
ஒரு மலையாளி ஓட்டுனர்

பதிலாய் என் கேள்விக்கு
“பாஸ் எல்லாம் தமிலல்லோ” என்றான்.

வாழும் நிலைகளில்
உயிர்வதை சுமந்தொரு வாழ்வும்.
உயிர் வாழ சார்ந்தொரு வாழ்வும்.

o

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி