கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

வசீகரன்


நிலங்களை விழுங்கும்
சிங்கத்தின் திறந்த வாய்க்குள்
எறும்புகள் போல் நுழைந்து
போர்முகங்கள்
தற்கொலை செய்கிறது

ஒருவேளை கஞ்சிக்காய்
உயிர் சுமக்கும் கோப்பையில்
உச்ச துன்பங்களை அணைத்தபடி
உறங்கும் எலும்புக் கூடுகள்

தொண்டு நிறுவனங்களும்
எட்டாத தூரத்தில்
தொலைந்து போனது
எலும்புக் கூடுகளில்
பட்டினிப் பதாகைகள்
ஏந்தியபடி காலில்லாத
கைகள் அசைகிறது

அழித்து அழித்து
ஆனா எழுதிய மண்ணில்
உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும்
உயிர் இழந்து கிடக்கிறது
கண்ணீர் வெடித்துச் சிதறியபடி
”ஐயோ அறுவான்கள்
பல்குழல் அடிக்கிறாங்கள்”
மௌனக் குரல்கள் கொதிக்கிறது

வல்லினம் மெல்லினம்
இடையினம்
எல்லாம் வேடிக்கை பார்க்க
பீரங்கிகள் வாய்திறந்து
பிசாசுகள் போலவே
குண்டுகளைத் துப்புகிறது

நீலக் கடல் எழுந்து
குருதியில் தோய்ந்து குளிக்க
நீந்திப் போகிறது
சிங்கத்தின் பற்களில்
சிக்கிக் கிழிந்த மீன்கள்

எறிகணை வீச்சில்
தலைகள் பறக்க
விமானக் குண்டு வீச்சில்
விரல்கள் பறக்க
வானம் இடிந்து விழுகிறது

மரணத்தின் வாடையில்
உலாவும் மூச்சுக்காற்றை
பொசுபத்து வெப்பம் தின்ன
சாம்பல் பறக்கிறது

ஒரு கூட்டில் இழவு நடந்தால்
ஊரே கூடி ஒப்பாரி வைக்கும்
ஊரே இழவாய் வீழ்ந்தால்
ஒரு கூடு என்ன செய்யும்?

வசீகரன்
நோர்வே
01.03.2009

Series Navigation

வசீகரன்

வசீகரன்