ஒட்டக்குண்டி பாலம்

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

கே.பாலமுருகன்


காலம் 1

ஒட்டக்குண்டி பாலம்
மூத்திர வாடையுடன்
புளிய மரத்தின்
கிளை நிழல் சரிய
எப்பொழுதாவது போதையுடன்
நடந்துவரும்
சன்னாசி கிழவனின்
அகால முணுமுணுப்புடன்
நீண்டு வளர்ந்திருக்கிறது

மூத்திரம் பெய்யும்
சிறுவர்களின் நடமாட்டம்
எப்பொழுதுமிருப்பதால்
ஒட்டக்குண்டி பாலம்
சிறுநீரை விழுங்கி
சேகரிக்கும் பழக்கத்திற்கு
ஆளாகியிருந்தது

ஒட்டக்குண்டி பாலம்
பலங்காலமாக
ஒரு ஊமையை
வளர்த்த கதையைப் பற்றி
சொல்லியாக வேண்டும்

இருளில் மட்டும்
பாலத்தின் அடியிலிருந்து
வெளியை எக்கிப் பார்க்கும்
மனோபாவத்துடன்
அந்த ஊமை
வாழ்வின் மீதங்களையும்
இழந்த சொற்களையும்
சரிகட்டிக் கொண்டிருந்தான்

ஒட்டக்குண்டி பாலத்தின்
அடிவாரத்தில் வந்துசேரும்
பொருட்களிலெல்லாம்
சொற்கள் ஒட்டிக் கொண்டிருந்தன

அதைக் கண்டு ஊமை
பரவசமடைந்தான்



காலம் 2

மூத்திரம் பெய்யும்
சிறுவர்கள்
ஒட்டக்குண்டி பாலத்திற்கு
வருவதில்லை

சன்னாசி கிழவன்
தவறிப் போய்
பல வருடங்கள்
ஆகிவிட்டிருந்தன

ஒரு தொடர்
மழைக் கால
உக்கிரத்தின்
பெரும்வெள்ளத்தில் சிக்கி
ஊமை காணாமல்
போயிருந்தான்

ஒட்டக்குண்டி பாலத்தின்
அடிவாரத்திலிருந்து
இன்றும்
அசைந்து கொண்டிருக்கின்றன
மூத்திர வாடையும்
முணுமுணுப்பும்


ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்