மெளனமாய் இருந்ததில்லை கடல்.

This entry is part of 34 in the series 20090205_Issue

ஹெச்.ஜி.ரசூல்கடலின் உள் ஆழங்களிலிருந்து
கூட்டங் கூட்டமாய் எழுந்து வந்த
வினோதப் பறவைகளின்
அலகுகளிலும்
கால்களின் இடுக்குகளிலும்
விசித்திரக் கற்கள்
வானுயர்ந்த சிறகசைப்பின் பறத்தலில்
வீசி எறிந்து சிரிக்கின்றன.
கல் விழுந்த உடல்
தீப்பிடித்துச் சாம்பலாக
எங்கும்பரவுகிறது குதூகலம்
நீந்திக் கொண்டிருந்த சிறகுகள்
கடல் பாறைகளின் மீது மோதி
நீரோடு போராடி
பெரிய மீன்களின் செவிள்களில்
சிக்கிக் கிடந்தன.
தீராத அலைகளின் வழி சுழிகடந்து
வலைகளை அறுக்கமுடியாமல்
தவித்து
மீளமுடியாததொரு இருப்பின் வலி.
இரக்கம் காட்டும் முகபாவத்தோடு
வேடிக்கை பார்த்துக் கொண்டு
கரையில் நின்ற உன்னால்
மரணப் பல்லக்கு ஒன்றோடு மட்டுமே
நிற்க முடிந்தது.
என்றும் மெளனமாய்
இருந்ததில்லை கடல்.


Series Navigation