காந்தியின் மரணம்

This entry is part of 34 in the series 20090205_Issue

வைதீஸ்வரன்


(

காந்தியின் நினைவாக கனடா பசுபதி திருக்குறளையும்
மேலும் சில இனிய கவிதைகளையும் ஒரு நல்ல ஞாபகார்த்தமாக
பிரசுரித்திருந்தார்..
ஆனால் காந்தி இந்த காலகட்டத்தில் யாருக்கும் அவ்வளவாக
நினைவில் இல்லை என்பது தான் நிதர்சனமாகிக் கொண்டு வருகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை நாம் முகம்பார்க்காத அப்பாவின் தவசத்தைப்
போல் அரசியல் தலைமைகளில் மலர் மாலை சூட்டப் படுவதைத்
தவிர நமக்கு அவரையும் அவர் உயிர் நேசத்தையும் யோசிக்க அவகா
சமில்லை
காந்தியின் கொள்கைகளின் பொருத்தம் பற்றி பல விவாதங்கள் இப்போது
அலசப் பட்டாலும் ஒரு மகாமனிதனின் குறைந்த பட்ச லட்சியமான
அஹிம்சையையாவது சற்று கடைப் பபிடிக்க முற்படலாம்…

உண்மயாகவே காந்தி இப்போது தான் செத்துக் கொண்டிருக்கிறார்.
காந்தியின் இந்த இக்கட்டு நிலைமை பற்றி என் கவிதைகளில் இரண்டு
இப்போது நினைவுக்கு வருகின்றது.. அதை வாசிக்காத அநேக வாசகர்
களுக்காக இங்கே மீண்டும் தருகிறேன்..)தொந்தரவு

சத்திய அவதாரத்திற்கு
ராஜ்காட்டில் சமாதிகட்டி
ஆண்டுக் கொருமுறை
கூட்டமாய் கை கூப்பி
வட்டமாய் வருத்தப் படுவதில்
தப்பொன்றுமில்லை, அது
ராஜரீக மரியாதை

ஆனால் அதே முகத்தை
கண்ணாடி சட்டத்துக்குள் கைதியாக்கி
கவர்மண்டு ஆபீஸ்களில்
கரும் பச்சை மூலைகளில்
கட்டாயம் போல் தொங்க விடுவதற்குத் தான்
காரணம் பிடிபடவில்லை.
நடப்பதோ மாமூல் காரியங்கள்
மகானின் முகத்துக்கு
அங்கென்ன வேலை??விசும்பல்

கடற்கரை யோரம்
கைகளை உயர்த்தி
விசும்பிக் கொண்டிருந்தான்
ஒரு கிழவன்.
என்னாச்சு….தாத்தா…? என்றேன்.
”நிலத்தில் ஊன்றி நிற்பதற்காக
கைத் தடி வைத்திருந்தேன்..
பிடுங்கிக் கொண்டு போனான்
என் பேரன்..
நாலு பேர் மண்டையைப் பிளப்பதற்காக,
அதுவும் என் பிறந்த நாளன்று…’
என்று புலம்பினான்..
நான் இடத்தை விட்டு நகர்ந்தேன் 1
* * * *

Series Navigation