தாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை !

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



ஆற்றின் அக்கரை யிலிருந்து
பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டு
படகில் வருவது யாரவன் ?
அவனை நான் அறிவேன் !
கடற்பாயை முழுதும் விரித்துப்
படகு போகுது மிதந்து
துரிதமாக ! அவன்
இடப்புறமும் நோக்கான் !
வலப்புறமும் பார்க்கான் !

மனமுறிவுக் கொந்தளிப்பு
கரைபுரண்டு
இருபுறமும் அலைகளாய் அடிக்கும் !
எனக்குப் பழக்க மானவன் என்று
நினைத்தது உண்டு !
மங்கிய நினைவில் உள்ளவனே !
எங்கே போகிறாய் ?
எந்த அன்னிய தேசத்துக்கு ?

படகைத் திருப்பி நீ
ஒருமுறை எனது
கரைப் பக்கம்
வருகை தர மாட்டாயா ?
விரும்பிய தளத்துக்குப் போ !
வேண்டிய வனைத்
திருப்தி செய்யப் போ !
ஒருகணம் மட்டும் என்னிடம்
திரும்பி வந்து
பொன்னான எனது
அறுவடையை அள்ளிக் கொள்
முறுவல் பூத்து !

நிரப்பிக் கொள் படகை நீ
விரும்பிய மட்டும்
அது போதுமா ?
ஆயினும் என் இருப்பு தீர்ந்தது !
என் களஞ்சியம் காலி !
இக்கரையில்
என் மனம் கொள்ளை யிட்ட
எல்லாப் பொருட்களையும்
ஏற்றுகிறேன் வரிசையாய்
இப்போது உன் படகில் !
இரக்கம் காட்டு வாயா
என் மீது
என்னையும் உன் படகில்
ஏற்றிக் கொண்டு ?

படகில் இடமில்லை எனக்கு !
இடமில்லை அங்கே ! அந்த
நெருக்கடிப் படகில் !
நிரப்பி விட்டது இடத்தை
தங்கமான அறுவடை ஒன்றே !
தனித்து விடப் பட்டேன்
நானிங்கு
யாருமற்ற கரையில் !
தங்கப் படகு தூக்கிப் போனது
எனக்கிருந்ததை !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா