கவிதைகள்

This entry is part of 28 in the series 20081218_Issue

தாஜ்அக்கரைக் காட்சி

அவர்கள் பெருத்துவிட்டார்கள்
மனிதர்களின் மாற்றாய்
நிஜங்களின் நிழலாய்
நகர வீதிகளின் அங்கமென
நடமாடும் அவர்கள்
லோக காப்பாளர்களால்
கல்லடிப் படும்வரை
அடையாளம் தெரிவதில்லை.
நான் காலாறும் இடமெல்லாம்
கேலிச் சிரிப்போடு
சகஜமான அவன்
நேர் நின்றதோர் நேரம்
முகம் பார்த்து கையெந்த
இக்கரையிலிருந்து
கருணையோடு பார்த்தேன்
என் பார்வையை
அவனும் பார்த்தான்!


மூ ல ம்

பக்கத்தில் வந்து
கண்பார்க்க
கைகளில் இருந்ததை
தட்டிப் பறித்தன
அவைகள்!
சிலர் வீசியெறிந்ததை
பொறுக்கிய வேகத்திலும்
குட்டிகளைச் சுமந்தே
மலையேறின.
கொடிகளைப் பற்றியவைகள்
ஊஞ்சலாடித் தாவி
கிளைகள்மாறி நடை போட்டு
தடங்கலற மேலே நகர்ந்தன
உச்சத்தில் குந்த
வாய்ப்பற்றவைகள்
உறுமல் மொழியோடு
சதா தாண்டிக் குதித்தன.

நம் மூலமென சிலாகித்தாலோ
குரல் கொடுத்தாலோ
அவைகளின் சேட்டைகள்
கூடிக்கொள்கிறது.
தெற்கைக் காட்டிலும்
வடக்கில்தான் இவைகளின்
நவகொட்டம் என்கின்றனர்.

உச்சாணிக் கொம்பிலிருந்து
வாலில் தீயேந்தி
கடல்தாண்டிக் குதித்த ஒன்று
பலிகளைப் பொசுக்கி
கொண்ட கோரத்தை
யுத்தக் காண்டமாய் வாசித்து
கண்கள் சிவந்ததுண்டு.
————————————-
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation